ஜெஃப் பெசொஸ் | தினம் ஒரு அறிவியல் மேதை



 ஜெஃப் பெசொஸ்

அமேசான். காம் எனும் இணையத்தில் நடைபெறும் வர்த்தகத்தில் டாப் ஹீரோவாக இருக்கும் நிறுவனத்தை உருவாக்கியவர்        ஜெஃப் பெசொஸ். அப்பா க்யூபாவில் இருந்து வந்த அகதி என்றாலும் அம்மாவின் அப்பா வழியில் ஏகப்பட்ட சொத்து இருந்தது; சின்ன வயதில் இருந்தே எதையாவது துறுதுறு என்று பண்ணிக்கொண்டிருக்கும் குணம் இவரிடம் இருந்தது. தொல்லை கொடுக்கும் சுட்டிகளைப் பயமுறுத்த எலெக்ட்ரானிக் அலாரம் தயாரித்தார்; தாத்தாவின் கேரேஜில் எப்பொழுது பார்த்தாலும் ஆய்வுகள் செய்து கொண்டும், எதையாவது உருவாக்கிக் கொண்டும் இருந்த இவர் ஆசைப்பட்டது ஒரு விண்வெளி வீரனாக ஆகவேண்டும் என்றே; ஆனால், வேறு விஷயங்கள் அவருக்காகக் காத்திருந்தன, கல்லூரி போனதும் இயற்பியலில் இருந்து அவர் காதல் கணினியின் பக்கம் திரும்பியது; கணினி மற்றும் மின்னணு அறிவியல் துறையில் பட்டம் பெற்று வெளியே வந்தார். மிகப்பெரிய நிறுவனங்களில் வேலைபார்த்து லட்சக்கணக்கில் சம்பாதித்தார்.

இளவயதில் மிகப்பெரிய நிதிநிறுவனம் ஒன்றின் துணைத்தலைவர் ஆனார். அதோடு நின்று இருக்கலாம்; வருடத்திற்கு 2300 சதவிகிதம் இணையப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை உயர்கிறது என்பதைப் பார்த்தார்; அந்நேரம் இணையத்தில் வர்த்தகம் செய்பவர்கள் சேவை வரி செலுத்த தேவையில்லை என அமெரிக்கச் சுப்ரீம் கோர்ட் சொல்ல, வேலையைத் தூக்கிக் கிடாசிவிட்டு கிளம்பினார் மனிதர். இணையத்தில் புத்தகங்களை ஆர்டர் செய்தால் போதும், வீட்டுக்கே கொண்டுவந்து டெலிவரி என்பது தான் கான்செப்ட்; அதுவும் விலை குறைவாகத் தருவது தான் போனஸ். ஆரம்பிக்கிற பொழுது மிகக்குறைந்த எண்ணிக்கையில் தான் ஆட்கள் இருந்தார்கள். அமோக வரவேற்பு உண்டானது.

சில வாடிக்கையாளர்கள், "ஏன் நீங்கள் எலெக்ட்ரானிக் சாதனங்கள் விற்கக் கூடாது?” என்று கேட்க அதையும் ஆரம்பித்தார். டிவிடிக்களும் சேர்ந்துகொண்டன. புத்தகங்களை விட எலெக்ட்ரானிக் சாதனங்கள் சக்கைப்போடு போட்டன. இப்பொழுது ஷு, நகைகள் கூட ஆன்லைனில் விற்கிறது அமேசான். அதோடு நின்று விடவில்லை, சாதாரண மக்கள் பயணிக்கும் வகையில் விண்வெளிப் பயணத்திட்டத்தை ஆரம்பித்தார். 

அமேசானின் பாணியே கச்சிதமானது. எடுத்த உடனே அதிரடி லாபம் என்பது மற்றவர்களின் நோக்கமாக இருக்கிற தொழில்நுட்ப உலகில் ஒரு பொருளின் விற்பனையில் அடுத்து இன்னொரு பொருளை விற்பதற்கான திட்டமிடலை அமேசான் அமைதியாக முன்னெடுத்து இருக்கும். kindle வாசிப்பான்களைத் தயாரிப்பு செலவை விடக் குறைவான விலைக்கு அமேசான் விற்ற பொழுது, 'இவர்கள் இத்தோடு காலி !' என்றே கணித்தார்கள். புத்தகங்கள், ட்யூன்கள் என்று தன்னுடைய சந்தைப் பொருட்களை விற்க அடித்தளமாக அதை அமேசான் பயன்படுத்தியிருந்தது அடுத்தடுத்த திட்டங்கள் வெளிவந்த பொழுது தான் உலகத்துக்கு உறைத்தது

அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா மூச்சைப் பிடித்துக்கொள்ளுங்கள் 23 பில்லியன் டாலர்! எப்படி இது சாத்தியம் எனக் கேட்ட பொழுது அவர் சொன்னது, "பெரிதாகக் கனவுகள் எனக்கு; என் கனவுகளைத் துரத்திக்கொண்டே இருந்தேன்; இருப்பேன். மற்றவர்கள் புரிந்துகொள்ளாவிட்டலும் பரவாயில்லை. கனவுகளோடு ஓடி சாதிப்பது சுகமானது!”


Post a Comment

Previous Post Next Post

Follow Outlines of Botany