கலிலியோ கலிலி | தினம் ஒரு அறிவியல் மேதை

 


கலிலியோ கலிலி

கலிலியோ கலிலி நவீன அறிவியல் மற்றும் இயற்பியலின் தந்தை எனப் போற்றப்படுபவர். பள்ளியில் படிக்கிற பொழுது அரிஸ்டாட்டில் மனிதனின் பற்கள் 28 எனச் சொல்லியதை எண்ணிப்பார்த்து இல்லை 32 என மறுத்தவர் இவர். அது போல வெவ்வேறு எடை உள்ள பொருட்கள் உயரத்தில் இருந்து போடப்படும் பொழுது வெவ்வேறு சமயத்தில் வந்து விழும் என உறுதியாக அரிஸ்டாடிலின் கருத்தை ஆய்வுக்கு உட்படுத்த முடிவு செய்து பைசா கோபுரத்தின் மேலிருந்து வெவ்வேறு எடையுள்ள குண்டுகளைப் போட்டு பார்த்தார். இரண்டும் ஒரே சமயத்தில் பூமியை அடைவதைக்கண்டு அரிஸ்டாட்டில் சொன்னது தவறு என அறிவித்தார்.


மருத்துவம் படிக்கப்போன இவர் இயற்பியலின் மீது காதல் கொண்டது வேடிக்கையான நிகழ்வு. ஆஸ்டில்லோ ரிக்கியின் கணிதம் பற்றிய சுவையான ஒரு பேச்சை கேட்டு ஈர்க்கப்பட்டு இயற்பியல் சார்ந்து இயங்க ஆரம்பித்தார் மன்னனின் மகன் கண்டுபிடித்த இயந்திரம் வீணானது எனச் சொன்னது மருத்துவப் பட்டத்தை அவர் பெறாமல் தடுத்தது. கணித பேராசிரியர் ஆனார். பீரங்கி குண்டின் இலக்கை ஆராய்ச்சியின் மூலம் சொன்னார்; ஹாலந்து தேசத்தில் ஒருவர் ஒற்றர் கண்ணாடி எனும் கண்ணாடியின் மூலம் தூரத்தில் இருப்பவர்களை அருகில் காட்டும் கண்ணாடியை வடிவமைத்து இருப்பதைக் கேள்விப்பட்டே தனக்கான தொலைநோக்கியை உருவாக்கினார். நிலவைப் பார்த்து அதில் பாறைகளும், மலைகளும் இருப்பதைச் சொன்னார். பல்வேறு கிரகங்களை உற்றுப்பார்த்துச் சூரியனை கிரகங்கள் சுற்றி வருவதாக உறுதியாகச் சொன்னார்.


ஏற்கனவே பைபிளுக்கு மாறாக அக்கருத்தை சொன்ன ப்ரூனோ எரித்துக் கொல்லபட்டிருந்தார். இதையே கலிலியோ சொன்னது எதிர்ப்பை உண்டாக்கியது. அதே சமயம் ‘டயலாக்ஸ்’ எனும் நூலை எழுதினார்; ஒருவர் பூமியை சூரியன் சுற்றுகிறது என்றும் இன்னொருவர் பூமி தான் சூரியனை சுற்றுகிறது என்றும் பேச இன்னொருவர் இருவரின் கருத்துகளையும் திறந்த மனதோடு பரிசீலனை செய்வதாக அந்நூலை வடிவமைத்தார்.


தெர்மாமீட்டருக்கு முன்னோடியான தெர்மோஸ்கோப், ராணுவ திசைகாட்டி எனப் பலவற்றை உருவாக்கினார். 

அவரின் டயலாக்ஸ் நூலின் மீது தடை விதிக்கப்பட்டது; அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்; மீண்டும் உண்மையைச் சொன்னதற்காக மருத்துவம் பார்க்காமல் முழுக் குருடர் ஆக்கப்பட்டார். 200 வருடங்கள் கடந்து 1822 -ல் அவர் சொன்னதன் உண்மை புரிந்து அவர் நூலின் மீதான தடைவிளக்கப்பட்டது. 1992-ம் ஆண்டுக் கலிலியோ சொன்னது சரியென்றும், அவரை சிறைப்படுத்தியது தவறு எனவும் வாடிகன் மன்னிப்பு கேட்டது. தான் சொன்ன உண்மைக்கான நீதி கிடைக்கக் கலிலியோவின் ஆன்மா 400 ஆண்டுகள் காத்திருந்தது என்பதைப் பார்க்கும் பொழுதே சிலிர்க்கிறது.

Post a Comment

Previous Post Next Post

Follow Outlines of Botany