ஜான் ஹன்டர் | தினம் ஒரு அறிவியல் மேதை



ஜான் ஹன்டர் 

 ஜான் ஹன்டர்-இங்கிலாந்தில் பிறந்த இணையற்ற மருத்துவ வல்லுநர். இவர் தன் சகோதரரால் அனாடமியில் ஆர்வம் கொண்டார். இன்றைக்கு போல அக்காலத்தில் மனித உடல்கள் சோதனைக்கு கிடைக்காது. தூக்கில் தொங்கவிடப்பட்ட பிணங்கள் கிடைத்தால் உண்டு. அதைக்கொண்டே பல்வேறு ஆய்வுகள் செய்வார்கள் மருத்துவர்கள், ஆனால், ஒரு பிணத்திற்கே பல பேர் காத்திருப்பார்கள். இவருக்கோ எல்லையில்லாத ஆர்வம் பார்த்தார் பிணங்களை கல்லறையில் இருந்து திருடி வந்து எண்ணற்ற ஆய்வுகள் செய்தார்.

உணவுச்செரிமான மண்டலத்தை பற்றி உணர்ந்து கொண்டார். நிணநீர் சுரப்பிகள் குறித்து ஆய்வுகள் செய்தார். இன்றைக்கு போல அன்றைக்கு செயற்கைப் பற்கள் இல்லாததால் ஒரு மனிதரின் பல்லையே இன்னொருவருக்கு பொருத்துவார்கள்; இறந்து போனவர்களின் பற்களை பொருத்திய காலத்தில், எவ்வளவு சீக்கிரமாகவும், ஃபிரெஷ்ஷாகவும் பற்கள் பொருத்தப்படுகிறதோ பலகாலம் அது நீடித்து உழைக்கும் எனச் சொன்னார்.

பல்லாயிரக்கணக்கான உயிரினங்களை அறுத்து, ஆய்ந்து படித்து அவற்றை சேகரம் செய்து பாடம் பண்ணிவைத்தார். அதுவே வருங்காலத்தில் மிகப்பெரும் அருங்காட்சியகம் ஆனது. போர்க்களத்தில் வீரர்களை காயங்களில் இருந்து குணப்படுத்த வெடிமருந்தை நீக்க வேண்டியது அவசியம். அதற்காக காயம் பட்ட இடத்தை இன்னமும் விரிவாக்குவார்கள் ! அம்முறை தவறென்று சொல்லி அதனால் நோய்த்தொற்று அதிகம் ஏற்படும் எனச் சொல்லி அறுவை சிகிச்சை முறைகளை மாற்றினார்; பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன.

கொனேரியா மற்றும் சிஃபில்ஸ் எனும் இரண்டு பாலியல் நோய்களும் ஒரே கிருமியால் உருவாகிறது எனத்தவறாக நம்பிய இவர் சிஃபில்ஸ் கிருமி இருந்த ஊசியை தன் உடம்பில் செலுத்திக்கொண்டார்; இவர் நேரம் கொனேரியா கிருமியும் கூட உட்கார்ந்து இருந்திருக்கிறது. இரு நோயால் அவதிப்பட்ட பொழுதும் உண்மையை நிறுவி விட்டதாகப் பூரித்தார். சீக்கிரமே மரணமடைந்தார். அறிவியல் அறுவை சிகிச்சையின் நிறுவனர் என கருதப்படுகிறார் இவர். மனிதகுல உய்வுக்காக தன்னின் வாழ்நாளையே அர்ப்பணித்த ஹன்டர் போன்ற மாமனிதர்கள் என்றைக்கும் நினைக்கத்தக்கவர்கள்

2 Comments

Post a Comment

Previous Post Next Post

Follow Outlines of Botany