நிகோலஸ் கோபர்னிக்கஸ் | தினம் ஒரு அறிவியல் மேதை



நிகோலஸ் கோபர்னிக்கஸ்

கிரேக்கத்தின் தத்துவம், அறிவு ஆகியன உலகைக் கட்டிப்போட்டிருந்தன. அவர்கள் சொன்னால் சரியாக இருக்கும் என்றே யாவரும் எண்ணினார்கள். அரிஸ்டாட்டில் வானியலுக்கு சில விஷயங்களை வகுத்துத் தந்துவிட்டுப் போனார். பூமிதான் இந்த மண்டலத்தின் மையப்புள்ளி. நம் பூமியானது நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகியவற்றால் உருவாகி உள்ளது . அதைச் சுற்றி பிற கிரகங்கள் சுழல்கின்றன . எனச் சொன்னார். அவை பூமியைச் சுற்றிக் கச்சிதமான வட்டப்பாதைகளில் சுழல்வதாக மனிதர் சொல்லிவிட்டுப் போனார்.

வந்தார் தாலமி; கிரகங்கள் பூமியைக் கச்சிதமான வட்டப்பாதையில் சுற்றிவந்து கொண்டிருப்பது உண்மையானால் ஏன் கிரகங்கள் ஒரே மாதிரியான சுற்றுப்பாதையில் பயணிப்பதில்லை என்கிற கேள்வி எழுந்தது. அதற்கு பதில் தந்தார் இவர். குறிப்பிட்ட ஒரு சுற்றுப்பாதை மட்டும் வட்டமாக இருக்கும். அதைச் சுற்றி வருகிற பொழுது மட்டும் கோள்கள் நமக்கு பூமியைச் சுற்றுவதை உணர முடியும்.

வேறு சில சமயங்களில் பிற பாதையில் பயணிப்பதால் ஒழுங்கற்றதாக அதன் இயக்கம் படுகிறது என்றார். ஈக்குவண்ட் என்கிற புள்ளியை உருவாக்கி அப்புள்ளியில் மட்டும் இவ்வாறு வட்டப்பாதையில் நகர்தல் நிகழும் என்றார்.

கோபர்நிக்கஸ் வந்தார். நல்ல வளமிகுந்த குடும்பத்தில் போலந்து நாட்டில் பிறந்திருந்தார் அவர் அப்பா அம்மாவின் மறைவுக்குப் பின் மாமாவின் கவனிப்பில் வளர்ந்த மனிதர் பாதிரியார் ஆனார். செல்வ வளத்துக்குக் குறைவில்லாமல் வாழ்க்கை நகர்ந்தது. பாதிரியாரான இவர் கிறிஸ்துவச் சட்டங்களைக் கற்றுத்தேற கல்லூரி போனார்.

அங்கு நோவரா எனும் வானியல் பேராசிரியரைக் கல்லூரி வாழ்க்கையின் பொழுது சந்தித்தார்; அவர்தான் தாலமியின் கருத்துக்களை விமர்சனத்துக்கு உள்ளாக்கிப் பார்க்கவேண்டும் என்றார். இவர் மருத்துவம் படிக்க வேறொரு கல்லூரிக்குப் போனார். அப்பொழுது வானியலும்,மருத்துவமும் ஒன்றுக்கு ஒன்றுக்கு இணைந்தவை எனக் கருதப்பட்டு வானியல் போதிக்கப்பட்டது. அங்கே கற்றுத்தேர்ந்த இவர்; தாலமியின் கருத்துக்கள் தவறு என்றார்.

பைபிளைக் கற்ற மதகுரு என்றாலும் அதில் சொல்லிய பூமிதான் மையம் அதைச்சுற்றித்தான் சூரியன் சுழல்கிறது எனும் கருத்தை மறுதலித்தார். சூரியன்தான் மையம் அதைச்சுற்றித்தான் மற்ற கோள்கள் சுழல்கின்றன அண்டம் மிகப்பெரிது அதில் சூரிய குடும்பம் மிகமிகச் சிறியது என அடித்துச் சொன்னார் . தான் எழுதியதை அப்பொழுதுதான் பிறந்த அச்சுத்துறையின் ‘ஆன் தி ரெவலுஷன்ஸ்' எனும் நூலாக வடித்தார். இவரின் கருத்தை ஒட்டி அதையே சொன்ன ப்ரூனோ எரித்துக் கொல்லப்பட்டார். கலிலியோ சிறைப்படுத்தப்பட்டார். ஆனாலும், உண்மையைப் பல்லாண்டுகள் கடந்து உலகம் ஏற்றுக்கொண்டது.

 

Post a Comment

Previous Post Next Post

Follow Outlines of Botany