ரேச்சல் கார்சன் | தினம் ஒரு அறிவியல் மேதை

 


ரேச்சல் கார்சன்

ரேச்சல் கார்சன் என்கிற மௌன வசந்தம் நூலை எழுதிய பெண்மணியின் வாழ்க்கை ஏற்படுத்திய அதிர்வலை கடந்த நூற்றாண்டின் சூழலியல் வரலாற்றில் மறக்க முடியாதது. எளிய குடும்பத்தில் பிறந்த ரேச்சல் பால்ய வயதிலேயே விலங்குகள், பறவைகள் ஆகியவற்றைக்கொண்டு கதைகள் தீட்டினார்.

ரேச்சல் கார்சன் உயிரியல் பாடத்தில் பட்டம் பெற்ற பின்னர் கடல்வாழ் உயிரிச்சூழல், மீன்வளம் ஆகியவற்றைப் பற்றிப் படித்து முடித்த பின்னர் முனைவர் ஆய்வு செய்யலாம் என்று பகுதி நேரத்தில் வேலை பார்த்துக்கொண்டே அவர் இயங்க முடிவு செய்த பொழுது அவரின் தந்தையின் இறப்புக் குடும்பத்தை உலுக்கியது.

குடும்பத்தின் பசியைப் போக்க வேலை செய்ய வேண்டும் என்கிற சூழலில் மேரி ஸ்காட் சிங்கர் எனும் விஞ்ஞானியின் உதவியால் மீன்வளத்துறையில் தற்காலிக பதவி கிடைத்தது. தேர்வெழுதி அதை நிரந்தரமாக்கி கொண்டார் அவர். அக்காவின் மரணத்தால் அவரின் இரண்டு குழந்தைகளையும் தானே வளர்க்க வேண்டிய இக்கட்டுக்கும் அவர் தள்ளப்பட்டார்.

குடும்பச் சூழல் அழுத்திக்கொண்டு இருந்த தருணத்தில் சூழலியல் அதிலும் குறிப்பாகக் கடல் சார்ந்து தன்னுடைய தேடலை அவர் அதிகப்படுத்திக்கொண்டே போனார். கடற்காற்றின் கீழே என்கிற நூல் அவருக்குப் பாராட்டைத் தந்தாலும் பெரிய அளவில் விற்பனையாகவில்லை. இந்தச் சூழலில் அமெரிக்க மீன் மற்றும் காட்டியிரி சேவை அமைப்பின் ஆசிரியராக ஆனபின்பு 'நம்மைச் சுற்றியிருக்கும் கடல்', 'கடலின் முனையில்','வானைபற்றிச் சில சங்கதிகள்' ஆகிய நூல்கள் எளிய மொழியில் சூழலியல் பற்றிப் பார்வையை மக்களிடம் கொண்டு சேர்த்தன. அதிலும் அவரின் இரண்டாவது நூல் ஆவணப்படமாகி ஆஸ்கர் விருதை அள்ளியது.

இந்தச் சூழலில் தான் அவருக்கு அவரின் தோழியான ஓல்கா ஓவன்ஸ் ஹக்கின்ஸிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. 1956-ம் வாக்கில் இங்கிலாந்தில் இலைகளை ஜப்பான் வண்டுகள் தின்று கொண்டிருந்தன. அவற்றைக் கொல்ல பூச்சிகொல்லியை வான் வழியாக ஹெலிகாப்டரின் மூலம் தெளித்தார்கள். அந்தப் பூச்சிக்கொல்லி பூச்சிகளைக் கொன்றதோடு நில்லாமல் நீர் வெளிகளில் கலந்து மீன்களைக் கொன்றது. மண் புழுக்களில் சேர்ந்து விஷமாக நிலம், நீர், காற்று ஆகியவற்றைப் பூச்சிக்கொல்லி மாசுபடுத்தியது. அதை உண்ட பறவைகள் கூடு கட்ட மறுத்தன. ஓரளவுக்குப் பாதிக்கப்பட்ட பறவைகள் கூடு கட்டினாலும் அவை ஈன்ற முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளிவரவே இல்லை. ஓடுகள் வலுவிழந்து போய்ப் பல முட்டைகள் போட்டதும் அழிந்து போயின. அதிலும் குறிப்பாக ராபின் என்கிற வசந்த காலப் பறவை பாதிக்கப்பட்டது. அதன் மவுனம் தோழியின் மனதை கீறியது. அதைக் குறிப்பிட்டு அவர் எழுதிய வாசகம் ரேச்சலை உலுக்கியது.

DDT' என்கிற பூச்சிக்கொல்லி முதன்முதலில் 1874 இல் உருவாக்கப்பட்டது ; ஒரு 55 வருடங்கள் கழித்து அதைப் பூச்சிக்கொல்லியாகப் பயன்படுத்தலாம் என்று பால் ஹெர்மான் முல்லர் என்பவர் கண்டுபிடித்தார். அவருக்கு அதற்காக நோபல் பரிசு 1948 இல் வழங்கப்பட்டது. பூச்சிகளை மொத்தமாகக் கொல்வதற்கு விமானங்களில் இருந்து இந்தப் பூச்சிக்கொல்லியை தெளித்த சம்பவங்கள் ஏராளமாக உண்டு ; DDT பொடியை பூசிக்கொண்டு போர் செய்யப்போகும் இடத்தில் பூச்சிகள் தங்களைக் கடிக்காமல் இருக்குமாறு ராணுவங்கள் பார்த்துக்கொண்டன.

இந்தப் பூச்சிக்கொல்லி அமெரிக்காவில் உண்டாக்கிய தாக்கத்தைப் பற்றித் தோழியின் கடிதத்துக்குப் பிறகு ரேச்சல் ஆய்வு செய்தார். ஏற்கனவே பல்வேறு நிபுணர்கள் அதைக்குறித்துச் செய்த தனித்தனி ஆய்வுகளை ஒன்றாகத் தொகுத்தார். அந்தப் பூச்சிக்கொல்லிகள் எப்படிப் பறவைகள், விலங்குகள் ஆகியவற்றையும் சூழலையும் பாதிப்பதோடு நில்லாமல் குழந்தைகளையும் தன்னுடைய நச்சுத்தன்மையால் தாக்குகிறது என்று ஆதாரப்பூர்வமாக நான்கு வருடகாலத் தேடலுக்குப் பின்னர் எழுதினார்.

மொட்டைக்கழுகுகள் என்கிற அமெரிக்காவின் தேசியப்பறவையின் முட்டை ஓடு வலுவிழப்பது துவங்கி மனிதர்களுக்குக் கேன்சர் ஏற்படுவது வரை எண்ணற்ற பாதிப்புகளை அது உண்டாக்குவதைச் சுட்டிக்காட்டினார். மேலும் எப்படிக் கதிர்வீச்சு மரபியல் மாற்றங்களை உண்டு செய்கின்றனவோ அது போலவே பூச்சிக்கொல்லிகளும் மனிதர்களிடையே பல மோசமான ஆபத்துக்களை உண்டு செய்கிறது என்று எடுத்து சொன்னார்.

அது மட்டுமில்லாமல் உணவுச்சங்கிலியின் அடுத்த அடுக்குக்குப் பூச்சிக்கொல்லி நகர்கிற பொழுது அதன் அளவு அதிகரிப்பதையும் அதிர்ச்சியோடு நிரூபித்தார். மேலும் எந்தப் பூச்சிகளைக் கொல்ல பூச்சிக்கொல்லியை உருவாக்கியதாகச் சொன்னார்களோ அந்தப் பூச்சிகள் எதிர்ப்பு சக்தி பெற்று DDT யை செயலிழக்க செய்ததையும் பதிந்தார். இன்னொரு பெரிய சிக்கல் இயற்கையான எதிரிகள் ஏற்கனவே DDT யால் அழிக்கப்பட்டு விட்டதால் எதுவுமே தேறாமல் இறுதியில் விஷத்தை மட்டுமே மனித குலம் சுமக்க வேண்டி நேரிட்டது என்று அவர் அறிவித்த பொழுது உலகம் நிமிர்ந்து உட்கார்ந்தது, நியூயார்க்கர் இதழில் தொடராக வந்த மௌன வசந்தம் நூலில் எப்படிப் பசுமை மற்றும் இயற்கை வனப்பு நிறைந்த ஒரு நிலப்பகுதி எதிரிகளின் சதியெல்லாம் இல்லாமல் அம்மண்ணின் மக்களின் செயல்பாடுகளால் அழிந்து காணாமல் போகிறது என்று கதை வடிவில் அவர் பதிவு செய்து வருங்காலத்தைப் பற்றி எச்சரித்தார். அவருக்கு எதிராக DDT நிறுவனங்கள் வழக்குகளைப் பதிவு செய்தன. அவரின் புத்தக அறிமுகங்கள் வராமல் தடுக்கும் முயற்சிகள் நிகழ்ந்தன. ஆனாலும் பத்து லட்சம் பிரதிகள் ஐம்பதே . நாட்களில் விற்றுத் தீர்ந்தது.

அவர் இந்தக் காலத்தில் புற்றுநோயால் பெருமளவில் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். அவரின் மார்பகத்தைத் துண்டித்து விட்டுத் தீனமான குரலில் மக்களுக்காகக் குரல் கொடுத்தார். தலையில் கதிர்வீச்சு சிகிச்சையால் ஏற்பட்ட வழுக்கையை விக் அணிந்து மறைத்தவாறு பல்வேறு CBS டி.வி. ஷோக்களில் உரையாற்றினார். அவரின் இடுப்பு எலும்பு பகுதி முழுக்கப் பாதிக்கப்பட்டு அமர முடியாத சூழலிலும் வருங்காலச் சந்ததி நிமிர்ந்து நடக்க வேண்டும் என்று போராடினார்.

ஒரு பேட்டி முடிந்ததும் தலையின் மீது கரங்களை வைத்து அப்படியே மேசையில் சாய்கிற அளவுக்குப் புற்றுநோய் அவரைத் தின்று கொண்டிருந்தது,என்றாலும். இறக்கிற வரை DDT க்கு எதிராக அவர் போராடி 56 வயதில் மரணித்துப் போனார். அவரைக் கம்யூனிஸ்ட் என்றும்,சதி செய்கிறார், பொய்யர் என்றும் எழுதிய இதழ்களே அவரை உலகை மாற்றியவர் என்று அவரின் இறப்புக்கு பின்னர் DDT தடை செய்யப்பட்ட பின்னர்ப் பதிவு செய்தன. மெளன வசந்தம் உண்மையில் மக்களின் வசந்தத்தை ஓரளவுக்காவது மீட்டது!

Post a Comment

Previous Post Next Post

Follow Outlines of Botany