லியானார்டோ டாவின்சி | தினம் ஒரு அறிவியல் மேதை

 

லியானார்டோ டாவின்சி

இரட்டை கைகளில் எழுதும் ஆற்றல் பெற்ற பென்சில் காதலர் ஒருவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீகளா? அவரை நமக்கெல்லாம் ஒரே ஒரு ஓவியத்தால் நன்றாகத் தெரியும். அவர் தான் லியனார்டோ டாவின்சி. கணிதம், இயந்திரவியல், சிற்பம், தாவரவியல், மனித உடற்கூறு ஆய்வுகள்,நிலவியல் கதைகள், கவிதைகள் என ஆல் இன் ஆல் இவர்தான்.

டாவின்சியின் முழுமையான பெயர் Leonardo di serPiera da Vinci. அதாவது வின்சி என்ற நகரில் உள்ள பியரோ என்பவரின் மகன் லியனோர்டோ என்று பொருள்.

இத்தாலியில் 1452 ஆம் ஆண்டுப் பிறந்தார் டாவின்சி. இவரது அப்பா ஒரு நீதிபதி. வெரோசியோ என்ற ஓவியரிடம் தங்கி சில காலம் டாவின்சி நுண்கலை படித்திருக்கிறார்.

அதன் பிறகு ரோம், வெனிஸ் போன்ற இடங்களில் ஓவியம் வரைவதற்காகத் தங்கியிருக்கிறார். சிறிய யந்திரப் படகும். தண்ணீர் இறைக்கும் இயந்திரமும் இவரால் மிக இளம் வயதிலேயே உருவாக்கப்பட்டன.

மாபெரும் குதிரைச்சிலை ஒன்றை டாவின்சி பிளாரென்சின் டியூக்கிற்காக அவரின் எல்லையற்ற அதிகாரத்தைக் குறிக்கும் வகையில் உருவாக்குகிறார். பின் அவரின் எதிரிகள் அந்த ஊரை கைப்பற்றியதும் அச்சிலை சிதைக்கபட்டது. கலை காதல் இல்லாத இந்த ஊரில் இருக்கக் கூடாது என்று பிளாரென்சை விட்டு வெனிஸ் சென்றார்.

டாவின்சி மனிதனை பற்றிப் புரிந்து கொள்ள மருத்துவமனைகளுக்குச் சென்று மரணத்தருவாயில் உள்ள மனிதர்களின் கடைசி நிமிசங்களை நேரடியாக ஆய்வு செய்து ஓவியங்களாகத் தீட்டியிருக்கிறார். அதுபோலவே இறந்து போன மனிதர்களின் உடல்களை ரகசியமாக விலைக்கு வாங்கித் தனது இருப்பிடத்தில் வைத்து அறுவை செய்து உடலின் உள் அமைப்புகளைச் சித்திரமாகத் தீட்டியிருக்கிறார்.

இன்றைய நவீன மருத்துவத்தின் ஆரம்ப முயற்சிகள் பலவற்றிற்குத் துவக்கப்புள்ளி டாவின்சியின் ஓவியங்களே.. இதயம் சுருங்கி விரிவதை விளக்கும் ஓவியம், குழந்தை அன்னையின் கருவில் இருக்கும் ஓவியம், உடல் உறுப்புகளின் அளவு மற்றும் நிறத்தை துல்லியமாகக் குறிக்கும் கவனம் என இவரின் உழைப்பு அலாதியானது.

இன்னொரு புறம் பீரங்கி, ஹெலிகாப்டர், சூரிய ஒளியைச் சேமிக்கும் கலன்கள், கால்குலேட்டர், பாரசூட் என இவர் அவதானித்து வரைந்தவை ஏராளம். உலகின் மிகப்புகழ் பெற்ற ஓவியமான மோனாலிசா ஓவியத்தில் இருக்கின்ற பெண்மணி Lisa di Anton Maria di NoldoGherandini. ஜியோரெடினி பிரபுவின் மனைவி.

தங்களது புதிய மாளிகை, குடிபுகுவதற்காகவும், இரண்டாவது மகன் பிறந்துள்ள சந்தோஷத்தைக் கொண்டாடுவதற்காகவும் இந்த ஓவியத்தை வரையும்படியாக ஏற்பாடு செய்தார் ஜியோரெடினி. இந்த ஓவியத்தைப் பதினாறு ஆண்டுகள் ரொம்பப் பொறுமையாக வரைந்தார். மனிதர்.

டாவின்சியின் மரணத்திற்குப் பிறகு அவரது மாணவரான சேலேயிடம் இந்த ஓவியம் பல காலமிருந்தது; அதை நெப்போலியன் தன்னறையில் வைத்திருந்தார். பின் அது லூவர் மியுசியத்துக்குப் போனது .

இவரின் கடைசி விருந்து ஓவியம் சிதைந்து போய்க் கொண்டிருந்தது. காரணம் இதை ஒரு தேவாலய சுவரில் வரைந்து விட்டார் மனிதர், அதை மீட்க தனி அக்கப்போர் நடந்தது. அவரின் மிகக்குறைவான ஓவியங்களே இன்றைக்கு நமக்குக் கிடைக்கின்றன.

மோனலிசா என்கிற இத்தாலிய பெண்மணியைக் கண் புருவம் இல்லாது டாவின்சி தீட்டிய ஓவியம் திருடுபோனது. ஒரு இத்தாலிய கனவானுக்காக இந்த ஓவியத்தை மூன்று வருட காலத்தில் வரைந்தார் டாவின்சி.

பின் பிரெஞ்சு அரசரால் விலை கொடுத்து வாங்கப்பட்டு அவரின் அரண்மனையில் இருந்தது; பிரெஞ்சு புரட்சிக்குப் பின் லூவர் அருங்காட்சியகத்திற்கு நகர்ந்தது ஓவியம்.

நெப்போலியன் தன் மாளிகையில் அதை அழகுபடுத்த வைத்துக்கொண்டான்; அவனுக்குப் பின் மீண்டும் லூவர் அருங்காட்சியகத்தில் அது சேர்க்கப்பட்டது. கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் முன் மோனலிசா ஓவியம் திருடுபோய் இருந்தது; லூவர் மியூசியத்தைக் கொளுத்துவேன் என்ற அப்போலினேர் மற்றும் அவரின் நண்பர் பாப்லோ பிக்காசோ சந்தேகத்தின் பெயரில் விசாரிக்கப்பட்டனர்.

வெறும் இடத்தைப் பார்க்கவே கூட்டம் அலைமோதியது வரலாறு; பின் இரண்டுவருடம் கழித்து அங்கேயே வேலை பார்த்த பெருகியா இத்தாலியை சேர்ந்த தன் நாட்டிற்குக் கொண்டு போக அதைத் திருடிக்கொண்டு போயுள்ளான். இரண்டு வருடம் பொறுத்தவன், பின் பொறுமை தாளாமல் பிளாரன்ஸ் நகரில் விற்கபோய் மாட்டிக்கொண்டான். அவனுக்கு ஆறுமாதம் சிறைத்தண்டனை கிடைத்தது; அவனூரில் தேசபற்று மிகுந்தவன் எனக் கொண்டாடப்பட்டான். ஒரு நாட்டின் நியாயம் இன்னொரு நாட்டின் துரோகம் ஆகிறது இல்லையா ? இப்பொழுது குண்டு துளைக்காத கண்ணாடியில் ஜம்மென்று பிரெஞ்சு லூவர் அருங்காட்சியகத்தில் இருக்கிறார் மோனலிசா.

Post a Comment

Previous Post Next Post

Follow Outlines of Botany