அன்டன் வான் லீவன்கோக் சாதாரண துணி வியாபாரியாய் இருந்து ஒரு மாபெரும் கண்டுபிடிப்பை அறிவியல் உலகத்தில் நிகழ்த்தியவர். ஆர்வமும், விடாமுயற்சியும் இருந்தால் எவரும் எதையும் சாதிக்கலாம் என உலகத்திற்கு உணர்த்திய அறிவியலாளர்.
லீவன்கோக் நெதர்லாந்து நாட்டிலுள்ள டெல்ப்ட் என்னும் நகரில் 1632 ல் பிறந்தார். அவரது தந்தை கூடை முடைந்து அதை விற்று தொழில் செய்பவர். அவரது தந்தை இறந்த பிறகு, தனது குடும்ப சூழ்நிலையின் காரணமாக ஆரம்பப் பள்ளியுடன் படிப்பிற்கு விடை கொடுத்து விட்டு, இளம் வயதிலேய தனக்கு கிடைத்த வேலைகளை செய்தார். கடைகளிலே கணக்குகளை எழுத்தித் தரும் கணக்குப் பிள்ளையாக இருந்ததுதான் அவர் பார்த்த முதல் வேலை. பின்பு துணி வியாபாரம் செய்பவர்களிடம் உதவியாளராக பணிபுரிந்திருக்கிறார். சிறிது காலத்தில் தானே சொந்தமாக துணி வியாபாரம் செய்யும் தொழிலை ஆரம்பித்தார்.
அந்நாட்களிலே துணி வியாபாரத் தொழிலே, நூலின் தரத்தை ஆராய்வதற்க்காக எளிமையான நுண்ணோக்கிகளைப் (Microscope) பயன்படுத்தி வந்தனர். லீவன்கோக்கும் அதை உபயோக்கிக்க ஆரம்பித்தார். அப்போதுதான் அவருக்கு அந்தக் கருவியின் மீது ஒரு இனம் புரியாத ஈர்ப்பு ஏற்பட்டது. அவரது பொழுதுபோக்கே அந்தக் கருவியை பிரித்து மேய்ந்து, அதை மேலும் மேலும் செம்மைப் படுத்துவதாக இருந்தது. நுண்ணோக்கிக்குத் தேவையான வில்லைகள் எனப்படும் லென்சுகளையும் தனது கைகளினாலேயே கடைந்து செய்து கொண்டார். தீராத முயற்சியினால் அதிக உருப்பெருக்கும் திறனை உடைய நுண்ணோக்கியை உருவாக்கினார். இது சுமார் 200 முதல் 300 மடங்கு வரை ஒரு பொருளை பெரிது படுத்திக் காட்டக் கூடியதாக அமைந்தது.
அவர் அதோடு நின்று விடவில்லை தான் செய்த கருவியினால், மழை நீர், குளங்களிலே தேங்கியுள்ள அழுக்கு நீர், இரத்தம் மற்றும் தனது வாயிலிருந்து உமிழ்நீரையும் எடுத்து உற்று நோக்கினார். அவருக்குள் ஒரு இனம் புரியாத ஒரு உணர்வு ஏற்பட்டது, இந்த உலகத்திலே இதுவரை யாருமே பார்த்தறியாத ஒன்று தனது கணகளுக்குப் புலப்படுவதை அறிந்தார். லீவன்கோக் அதுவரை உலகத்தில் எவருமே கண்டிராத பாக்டீரியாக்களை அதாவது நுண்ணுயிரிகளை, ஒரு செல் உயிரிகளை முதன் முறையாக பார்த்தவர் என்ற பெருமையைப் பெற்றார்.
அவர் கண்டறிந்த அந்த உயிரிகளுக்கு மிகச்சிறிய விலங்குகள் (animalcules) என பெயரிட்டார். பிறகும் லீவன்கோக் சும்மா இருந்து விடவில்லை, தன் கண்டுபிடிப்புகளை அழகாக வரைந்து, அதற்க்கான குறிப்புகளை எழுதி லண்டனிலுள்ள ராயல் சொசைட்டி என்ற அறிவியல் கழகத்திற்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தினார். தமது 90 வது வயதில் 1723 ல் அவர் இறக்கும் வரை தனது ஆய்வு சம்மந்தமாக சுமார் 190 கடிதங்களை அக்கழகத்திற்கு அவர் எழுதியுள்ளார்.
அந்த சாதாரண துணிகடைக்காரரின் கண்டுபிடிப்பு அறிவியல் உலகில் மாபெரும் திருப்பத்தை உண்டாக்கியது. எனவே தான் அவர் உலகின் ‘முதல் நுண்ணுயிரியலாளர்’ என்றும், ‘நுண்ணுயிரியலின் தந்தை’ என்றும் போற்றப்படுகிறார். அந்த துறையும், நுண்ணுயிரியும் இருக்கும் வரை இவரின் பெயர் நிலைத்து நிற்கும். தனது தனியாத ஆர்வத்தினாலும், விடா முயற்சியினாலும் தனக்கென்று ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டார் பள்ளிப் படிப்பைக் கூட தாண்டாத லீவன்கோக்.
Post a Comment