ஹென்றி ஃபோர்டு | தினம் ஒரு அறிவியல் மேதை

 


ஹென்றி ஃபோர்டு

ஹென்றி ஃபோர்டு, அமெரிக்காவில் இன்று எல்லாரும் கார் வைத்து இருப்பதற்கான அச்சுப்புள்ளி இவரால்தான் போடப்பட்டது. ஒற்றை டைம் பீஸ் பரிசை அக்குவேறு ஆணிவேராகப் பிரித்துப் போட்டு சேர்த்ததில் தொடங்கிய இயந்திரக் காதல் வாழ்நாள் முழுக்க இந்த ஃபோர்ட் எனும் மேதைக்கு தொடர்ந்தது.

ஒரு நகரும் ட்ராக்டரை முதன்முதலில் பார்த்து வாகனங்கள் மீது ஆர்வம் கொண்டார் அவர். நீராவி இயந்திரங்களைக் கழட்டி சேர்ப்பது அவற்றைப் பழுது பார்ப்பது என்று இயங்கிக்கொண்டு இருந்த அவர் ஒரு கண்காட்சியில் பெட்ரோலில் இயங்கும் நீராவி பம்பை பார்த்து அதை ஏன் வாகனங்களில் பொருத்தக்கூடாது என்று யோசித்தது தான் திருப்பம்.

உதிரிப் பாகங்கள், பழைய உலோகங்களையும் கொண்டு தன் வீட்டின் பின்புறம் இருந்த ஒரு செங்கல் கூடாரத்தில் தனது வாகனத்தை வடிவமைத்தார். மணிக்கு 10 மைல், மணிக்கு 20 மைல் என்று இரண்டு வேகங்களைத் தரக்கூடிய இருவேறு வார்பட்டைகளை வடிவமைத்துப் பொருத்தினார். ப்ரேக் இல்லாத பின்னோக்கி செலுத்த முடியாத அந்த வாகனத்துக்கு 'quadricycle' என்று பெயரிட்டார். அந்த வாகனத்தை ஓட்டிப்பார்க்க வேண்டும் என்று ஆர்வம் மேலிட பணிகள் முடிந்த பின்னர் அவர் முனைந்த பொழுது தான் வாசல் குறுகலாக இருக்கிறது என்று அவருக்குப் புரிந்தது. சில நொடிகளில் ஆயுதத்தை எடுத்து சுவற்றை உடைத்து நொறுக்கிவிட்டு அதே வேகத்தோடு பெட்ரோல் வாகனத்தில் பயணம் போனார்.

எளியவர்களுக்கும் குறைந்த விலையில் கிடைக்கும் வகையில் டி மாடல் காரை அடுத்தடுத்து பலபேர் ஒவ்வொரு பகுதியாக இணைக்கும் அதிவேக அசெம்ப்ளி லைன் முறையின் மூலம் சாதித்தார். அவரின் கார் சில நூறு டாலர்களில் கிடைக்க அமெரிக்காவில் கார் இல்லாத ஆளே இல்லை என்கிற சூழல் உண்டானது.

தன் மனைவியை வைத்துக்கொண்டு தான் உருவாக்கிய புத்தம் புது மாடலை சோதித்து பார்த்தவர் இவர். அதிக விற்பனை, அதில் தொழிலாளர்களுக்கும் அதிகச் சம்பளம், டீலர்களையும் மதித்து நடத்துவது என இவர் அறிமுகப்படுத்திய பல விஷயங்கள் அமெரிக்காவிற்கு முன்னோடி. தான் வாழ்ந்த 'க்ரீன்பீல்ட்' கிராமத்தை அப்படியே அருங்காட்சியமாக மாற்றியவர்.

அம்மா மீது தீராத அன்பு கொண்டவர். சிகரெட் பழக்கத்துக்கு எதிராக அமெரிக்க முழுக்கப் பிரபலங்களிடம் கையெழுத்து பெற்று விழிப்பு உணர்வு ஏற்படுத்த முயன்றவர். போர்ட் பவுண்டேஷன் அமைப்பை நிறுவி அறக்காரியங்களுக்கு எக்கச்சக்க பணம் செலவிட்டார் போர்ட். போருக்கு எதிராக நின்றவர் எனப் பல அற்புதமான முகங்களும் அவருக்கு இருக்கச் செய்தது.

ஆனால் தன் மகனின் இறப்புக்குப் பின் பொறுப்பேற்றபோது, கம்பெனியை லாபத்தில் இயங்க வைக்கமுடியவில்லை.

“உங்களால் முடியும் என்று நம்பினால் முடியும் ! முடியாது என்று நம்பினால் முடியாது. நீங்கள் நினைப்பதே சரி!” எனச் சொன்ன அவர் இறந்தபோது மாபெரும் வலியோடுதான் விடைபெற்றார்.

Post a Comment

Previous Post Next Post

Follow Outlines of Botany