எட்வர்ட் ஜென்னர் | தினம் ஒரு அறிவியல் மேதை

 


எட்வர்ட் ஜென்னர்

எட்வர்ட் ஜென்னர் மனித குலம் காக்க வந்த பெருமனிதர். பெரியம்மை உலகை பல நூற்றாண்டுகளாக உலுக்கி கொண்டிருந்தது. எகிப்திய மம்மிக்களின் முகத்தில் அம்மை வடுக்கள் இருக்கிறது என்பது எவ்வளவு காலமாக அது உலகை ஆட்டிப்படைத்து இருக்கும் என்பதைப் புரிய வைக்கும்.

எகிப்தில் இருந்து இந்தியாவுக்கு அந்நோய் வந்து சேர்ந்தது. உலகம் முழுக்கப் போர் மற்றும் வியாபாரம் செய்யப்போனவர்களின் உபயத்தில் நோய் பரவியது. ஒரு வருடத்தில் மட்டும் நான்கு லட்சம் பேர் நோயால் இறப்பது வருடாந்திர நிகழ்வானது. பிழைத்தாலும் விடாது கருப்பு போல மூன்றில் ஒரு நபருக்கு கண்பார்வை காலி. 

முகம் முழுக்கத் தழும்புகள்,எண்ணற்ற மரணங்கள் என்று உலகம் பீதியில் உறைந்து போயிருந்தது. அம்ஹெர்ஸ்ட் எனும் ஆங்கிலேய தளபதி பெரியம்மை கிருமியை அமெரிக்கப் பழங்குடியின மக்களுக்கு எதிராகப் பயன்படுத்த யோசனை எல்லாம் தெரிவித்தான். அம்மை குத்துதல் என்கிற முறை இந்தியா, சீனா, ஆப்ரிக்கா ஆகியவ்ற்றில் பிரபலமாக இருந்தது.

பெரியம்மையால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து விடுதலை பெற்ற நபரின் மருக்களில் பாலை எடுத்து இயல்பான மனிதர்களுக்குக் குத்துவார்கள். இதுதான் அம்மை குத்துதல். ஏகப்பட்ட நபர்களிடம் இருந்து தேவையான அளவுக்கு அந்தத் திரவம் கிடைக்காது. வீரியமும் ஒரே மாதிரி இல்லாமல் இருந்தது.

இப்பொழுது தான் ஜென்னர் காட்சிக்கு வருகிறார். இளவயதில் மருத்துவம் பயின்றுவிட்டு ஊர் திரும்பியவர், பிரபல ஜான் ஹன்டரை பார்த்தார். அவரிடம் எண்ணற்ற விஷயங்களை அனுபவப்பூர்வமாகக் கற்றுக்கொண்டார். அவரின் வழிகாட்டுதலில் குயில்களைப் பற்றி ஆய்வு செய்தார். அதில் குயில்கள் பிற பறவைகளின் கூடுகளை எடுத்துக்கொள்வதும், வளர்ப்பு பறவையை ஏமாற்றுவதையும் சொன்னார். நடுவில் ஹைட்ரஜன் பலூனை சொந்தமாகத் தயாரித்துப் பறக்க விட்டு விளையாடிக்கொண்டு இருந்தார்.

ஒரு பிரபலமான பழமொழி இங்கிலாந்தில் இருந்தது, "பசு மேய்க்கும் பெண்களும் பளிச்சான முகம் பெரியம்மையால் போகாது !" என்பதே அது . பசுவை கவனித்துக்கொள்ளும் பெண்களுக்குப் பெரியம்மை வந்து பார்த்ததே இல்லை மக்கள். இதை நகர்ப்புறவாசிகள் முட்டாள்தனம் என்றனர். ஜென்னர் இதைக் கவனித்தார். அப்பொழுது தான் பசு அம்மையால் பாதிக்கப்படும் பொழுது அதன் புண்களில் இருந்து வரும் திரவம் இவர்களின் உடம்பில் செலுத்தப்படுவதால் நோய் எதிர்ப்பு உருவாவதை கண்டார்.

சாரா நெம்ப்ஸ் எனும் பெண்ணின் கைநகத்தில் இருந்து பசுவின் நோய்க்கிருமியை எடுத்துப் பிப்ஸ் எனும் எட்டு வயது பெரியம்மை பாதிக்கப்பட்ட சிறுவனின் உடம்பில் செலுத்தினார். பையன் பிழைத்துக்கொண்டான்.

மதபீடங்கள் கடவுள் கொடுக்கும் தண்டனை இந்நோய் என்று சொல்லிக்கொண்டு இருந்தன. இவரின் தீர்வை ஏற்க மறுத்தார்கள். ராயல் கழகத்தில் இன்னமும் நன்றாக ஆராய்ச்சி செய்து ஆதாரத்தோடு வா என அனுப்பி விட்டார்கள். தன் பதினோரு மாத பையன் உட்படப் பல பேருக்கு அதே நோய்க்கிருமியை சுத்திகரித்துப் பயன்படுத்தினார். எல்லாரும் பிழைத்துக் கொண்டார்கள்.

ஆனால் ஏகத்துக்கும் இந்த முப்பதாண்டு காலத்தில் எள்ளலுக்கு உள்ளானார். ஒரு ஆங்கிலப் பத்திரிக்கை, ஜென்னரின் தடுப்பு முறையை எடுத்துக்கொண்டவர்களுக்குப் பசுவின் தலை முளைப்பதை போலக் கார்டூன் தீட்டியது. ஆனாலும் முப்பதாண்டு காலத்தில் உலகம் முழுக்க இம்முறை பரவ ஆரம்பித்து வென்றது. ஜென்னர் இறுதி வரை காப்புரிமை பெறாமல் எல்லா மக்களும் பயன் பெறட்டும் என்று விட்டுவிட்டார்

இங்கிலாந்தின் சில ராணுவ வீரர்கள் நெப்போலியன் படையால் கைது செய்யப்பட்ட பொழுது உதவச்சொல்லி ஜென்னர் ஜோசபின்னுக்குக் கடிதம் எழுதினார். அவரோ நெப்போலியனிடம் கேட்ட பொழுது முதலில் மறுத்து விட்டார். ஜென்னரின் கடிதம் என்று தெரிந்ததும் பதறியடித்துக் கொண்டு அனுமதி தந்தார் நெப்போலியன்.

அந்த அளவுக்கு தெய்வத்துக்கு இணையாக அவர் கருதப்பட்டார். உலகம் முழுக்க பெரியம்மை கடந்த நூற்றாண்டில் ஒழிக்கப்பட்டது. ஜென்னர் 'நோய் எதிர்ப்பியலின் தந்தை' எனப் புகழப்படுகிறார். சொந்த மகனை பணயம் வைத்து, பணத்தை முக்கியமாகக் கருதாமல், எளிய மக்களின் நம்பிக்கைகளை புறந்தள்ளாமல் வாழ்ந்த ஜென்னரிடம் நாம் கற்க எண்ணற்ற பாடங்கள் உண்டு.

Post a Comment

Previous Post Next Post

Follow Outlines of Botany