ஆடம் ஸ்மித்
நவீன பொருளியல் என்கிற கருத்தாக்கம் உண்டாகக்காரணமான ஆடம் ஸ்மித்தின் வாழ்க்கை வெகு சுவாரசியமானது. பொருளாதார அறிஞர்க ளின் சிந்தனை உலகை மாற்றி ப்போடுகிறது என்பதற்கு இருநூறு ஆண்டுகள் கடந்த பின்னும் கச்சிதமான எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் ஆடம் ஸ்மித். அவரின் தாக்கத்தில் காரல் மார்க்ஸ், கெய்ன்ஸ், மில்டன் பிரீட்மான் என்று எண்ணற்ற மேதைகள் இயங்கினார்கள். ஸ்காட்லாந்தை சேர்ந்த இவர் ஆக்ஸ்போர்டில் பட்டம் பெற்ற பின்னர்த் தத்துவப் பேராசிரியர் ஆனார்.
அரசின் கட்டுப்பாடு அற்ற சந்தை பொருளாதாரத்தை வலியுறுத்திய அவர் உண்மையில் அறத்தை வலியுறுத்துபவராக இருந்தார் என்பது ஆச்சரியம் தரலாம். அவர் அறம், பொருளாதாரம் முதலிய தலைப்புகளில் பாடம் எடுத்தார்.
எதையும் யாரும் தர்மத்துக்குச் செய்வதில்லை; ஒவ்வொருவருக்கும் தேவைகள் இருக்கின்றன. அதற்காக உற்பத்தி செய்வது நடக்கிறது என்று அழகாக எடுத்துச்சொன்னார். இங்கிலாந்தில் கள்ளக்கடத்தலை தடுக்கும் பொறுப்பில் அவர் நியமிக்கப்பட்டார். அதில் சிறப்புற செயல்பட்டாலும் கடத்தலை தன்னுடைய 'நாடுகளின் வளம்' நூலில் ஆதரித்து எழுதுகிறார் ஆடம் ஸ்மித். நியாயமற்ற சட்டங்கள் இருக்கிற பொழுது அதுவே வழி என்று அவர் பதிகிறார்.
இங்கிலாந்து அரசு காலனிகளைக் கவனித்துப் பெறும் வருமானத்தை விட அவற்றுடன் வியாபாரம் செய்வதன் மூலம் கிட்டும் வருமானம் அதிகம், ஆகவே, அரசு காலனிகளை விட்டுவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அரசு தலையிடாத சந்தை முறை, தடையில்லாத பன்னாட்டு வியாபாரம்,பல பேர் வேலையைப் பகிர்ந்து கொண்டு செயல்படுதல் ஆகியனவும் அவர் சிந்தனையில் உதித்தவையே.
அரசு வியாபாரத்தில் தலையிடாவிட்டாலும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தருவதை அரசே செய்ய வேண்டும், அதுவே பொருளாதரத்தை சிறப்பாக இயங்க வைக்கும் என்றும் எழுதினார் ஆடம் ஸ்மித். பொய்யாகத் தேவையை அதிகப்படுத்தி லாபம் பார்ப்பதையும் அவர் எதிர்த்தார். 'An Inquiry into the Nature and Causes of Wealth of Nations' என்கிற அவரின் நூலை பொருளாதாரப் பைபிள் என்றால் அது மிகையில்லை.
Post a Comment