ராபர்ட் எட்வர்ட்ஸ் | தினம் ஒரு அறிவியல் மேதை

 


ராபர்ட் எட்வர்ட்ஸ்

உலகில் பலருக்கு மழலையை மடியில் தூக்கி கொஞ்ச வேண்டும் என்பது தீராத ஆசையாக இருக்கும் எனினும், உடலில் உண்டாகும் குறைபாடுகள், சினை முட்டை, விந்து செல்கள் முதலியன போதிய திறன் கொண்டில்லாமல் இருத்தல் ஆகியன பிள்ளையைப் பெறுவது என்பதைப் பகல் கனவாக ஆக்கி வைத்திருந்தது நமக்குத் தெரியும். ராபர்ட் எட்வர்ட்ஸ் வந்தார் !

இங்கிலாந்தின் பேட்லி நகரில் தொழிலாளர் குடும்பத்தில் பிறந்தார். அம்மா, அப்பா, முதல் அண்ணன் என்று எல்லாரும் வேலைக்குப் போன சூழலில் அப்பா வேலை பார்த்த டேல்ஸ் பகுதியில் இருந்த பன்றிகள், ஆடுகள் ஆகியவற்றைச் சிறுவனாக இருந்த பொழுது கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தார். அவற்றின் இனப்பெருக்கம் எப்படி நிகழ்கிறது என்பதை உற்றுநோக்க ஆரம்பித்தார்.

உலகப்போர் சமயத்தில் நான்கு வருடங்கள் ராணுவத்தில் அவரும் பணியாற்ற வேண்டி வந்தது. அங்கே மெஸ்ஸில் தரப்பட்ட பாரபட்சமான கவனிப்புச் சோசியலிசம் பக்கம் அவரின் சிந்தனைகளைத் திருப்பியது

விவசாய அறிவியலில் ஆர்வம் கொண்டு பட்டப்படிப்புப் படிக்கப் புகுந்தவர் அதில் காலப்போக்கில் ஆர்வம் இழந்து விலங்கியல் பக்கம் திரும்பினார். பணம் போதாத நிலையில் பொருளாதாரச் சிக்கலில் இருந்த வீட்டிலும் வெவ்வேறு வேலைகள் பார்த்து தன் படிப்புச் செலவுகளைப் பார்த்துக்கொண்டார். உழைப்பு உன்னதம் தரும் என்று புரிந்தது

எலிகளின் உயிரியல் வளர்ச்சி பற்றி ஆய்வு செய்வது அவரின் முனைவர் பட்ட ஆய்வாக அமைந்தது. அப்பொழுது பெண் எலிகளிடம் இருந்து கரு முட்டைகளை அதிகமாக உருவாக வைக்க ஹார்மோன்களை ஊசியின் மூலம் செலுத்தி சாதித்தார்.

எர்னெஸ்ட் ரூதர்போர்டின் பேத்தியை காதல் திருமணம் புரிந்தார். அவருடனான இல்லற வாழ்க்கையில் ஐந்து பெண் குழந்தைகள் பிறந்தது. அவரின் மனைவிக்குப் பிரசவம் பார்த்த மோலி ரோஸ் எனும் குழந்தைகள் மருத்துவரிடம் அவர் ஒரு முக்கிய உதவி கேட்டார். கருமுட்டைகளைத் தரவேண்டும் என்பது தான் அந்தக் கோரிக்கை. கருமுட்டைகள் கிடைத்தன. அவை வளராது என்று முந்தைய ஆய்வுகள் சொல்லியிருந்தன. இருந்தாலும் முயற்சி செய்ததில் வளர்ந்தன. ஆய்வுகள் ஸ்டெப்டோ எனும் மருத்துவருடன் தொடர்ந்தது.

தொடர்ந்து தோல்விகள் துரத்தின. பல கருமுட்டைகளைத் திருமணமான பெண்களின் வயிற்றில் செலுத்தினார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்குச் செலுத்தியும் ஒரே ஒரு பெண்ணுக்கு மட்டுமே கர்ப்பம் தரித்தது. அந்தக்கருவும் கர்ப்பப்பையில் உருவாகாமல் பால்லோப்பியன் குழாயில் உருவாகி இருந்தது

தொடர்ந்து எதிர்ப்புகள் பழமைவாதிகள் மற்றும் அரசிடம் இருந்து வெளிப்பட்டது. மான்செஸ்டர் நகருக்கு வெளியே சிறிய ஜன்னல்கள் இல்லாத ஒரு மருத்துவமனையின் ஆய்வகத்தில் தங்களுடைய ஆய்வுகளோடு போராடினார்கள்.

இன்னமும் மூன்றே பெண்மணிகள் மட்டுமே பாக்கி என்கிற சூழலில் முதல் இரண்டு பேரிடமும் செய்த முயற்சிகள் தோல்வியுற்றன. இறுதியாகப் பிரவுன் என்கிற ஒன்பது ஆண்டுகளாகப் பிள்ளைப்பேறு இல்லாத பெண்ணிடம் கண்ணாடிக்குடுவையில் வளர்க்கப்பட்ட கருமுட்டையைச் செலுத்தினார். ஒரே ஒரு மாற்றமாகச் செயற்கையாக ஹார்மோன் மூலம் பெறும் கருமுட்டையை விடுத்து அந்தப் பெண்ணின் கருமுட்டையையே வளர்த்து செலுத்தினார். விட்ரோ என்றால் இலத்தீன் மொழியில் கண்ணாடி என்று பொருள் .கண்ணாடி குடுவைகளில் கரு முட்டை வளர்வதால் இம்முறையை ஆங்கிலத்தில் ‘இன்விட்ரோ பெர்டிலைசேசன்' என்பர்.

கருமுட்டை எடுக்கும் வேலைகளை ஸ்டெப்டோ செய்தார். அதைக் குடுவையில் விந்து செல்லோடு வளர்த்து செலுத்திய இறுதி முயற்சி வெற்றிப் பெற்றது. முதல் சோதனைக்குழாய் குழந்தையின் பிறப்புக்காகக் காத்திருந்தார்கள். குழந்தை குறைபாட்டோடு பிறந்தால் இனிமேல் இந்த ஆய்வே வேண்டாம் என்று முடிவு செய்துகொண்டு தான் பிரசவம் பார்த்தார்கள். லூயிசே பிரவுன் எந்தக்குறையும் இல்லாமல் பிறக்கவே சோதனைக்குழாய் முறை வெற்றிபெற்றது

அரை கோடி குழந்தைகள் இந்த முறையின் உலகம் மூலம் முழுக்கப் பிறந்திருக்கிறார்கள். ஸ்டேப்டோ பல வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார். ராபர்ட் எட்வர்ட்ஸ் மட்டும் நோபல் பரிசை 2010-ல் பெற்றார். ஆனால்,அவருக்கு dementia சிக்கலால் தன்னை எல்லாரும் புகழ்கிறார்கள் என்று புரிந்து கொள்ள முடியாத முடியாத சூழலிலேயே இருந்தார்

எண்ணற்ற வழக்குகள் அவரை வாழ்நாள் முழுக்கத் துரத்தின. "வாழ்க்கையின் மிக முக்கியமான நிகழ்வு குழந்தை ஒன்றைப் பெறுவதே !" என்கிற எண்ணமே தன்னைச் செலுத்தியது என்றார் அவர். அவர் இறந்த பொழுது சோதனைக்குழாய் முறையில் பிறந்த இளைஞர் ஒருவர் இப்படி அஞ்சலி செலுத்தியிருந்தார், "நீங்கள் தான் எனக்கு வாழ்க்கை தந்தீர்கள் !” பல லட்சம் பேர் அப்படித்தான் உணர்ந்திருப்பார்கள்.

Post a Comment

Previous Post Next Post

Follow Outlines of Botany