சலீம் அலி
சலீம் அலி என்கிற இந்தப் பெயரோடு பேசுகிற பொழுது ஏதோ ஒரு பறவை நன்றியோடு கீதம் எழுப்பிக்கொண்டு இருக்கும் என்றே படுகிறது. வாழ்க்கை முழுக்கப் பறவைகளைப் பற்றிய ஆராய்ச்சியிலும் ஆவணப்படுத்தலிலும் ஒரு மனிதன் பங்காற்ற முடியும் என வாழ்ந்து காட்டியவர் அவர் .
அப்பா, அம்மாவை மிக இளம்வயதில் இழந்து மாமா வீட்டில் வளர்ந்த பொழுது மாமாவின் வேட்டையைத் தொடர்ந்து பார்க்கிற பழக்கம் சசலீம் அலிக்கு இருந்தது. மாமா ஒரு நாள் ஒரு மஞ்சள் நிற தொண்டை கொண்ட சிட்டுக்குருவி ஒன்றை சுட்டு வீழ்த்தினார். அதன் பெயரென்ன என்று தெரிந்து கொள்ளும் ஆவல் சலீம் அலிக்கு உண்டானது. மாமா மும்பை இயற்கை வரலாற்று கழகத்தின் மில்லார்ட் எனும் ஆங்கிலேயரிடம் அழைத்துப் போனார். கண்கள் விரிய நின்று கொண்டிருந்த சிறுவனை நோக்கி அப்பறவையைப் பற்றி விவரமாக விவரித்து, அதன் பாடம் செய்யப்பட்ட ஒரு
மாதிரியை காண்பித்துவிட்டு இரண்டு பறவைகள் பற்றிய புத்தகத்தைத் தருகிறார். அங்கே தான் பறவைகள் மீதான காதல் சலீம் அலிக்குத் தொடங்கியது
கைடாக இருந்து வருமானம் போதாத நிலையில் மனைவியின் வருமானத்தில் குடும்பம் நடத்த வேண்டிய சூழல் வந்த பொழுதும் பறவைகளைத் தேடுவதை அவர் நிறுத்தவே இல்லை.
பறவையியலில் முக்கியமாக ஒரு பறவையை வீழ்த்தி அதன் இறக்கை, சிறகுகள், கால் என எல்லாவற்றையும் குறித்துக்கொள்வார்கள். பின்னர் இரைப்பையைக் கீறி அது என்ன உண்ணும் என்றும் அறிந்து கொள்வார்கள். அதன் உடம்பில் என்னென்ன உண்ணி உள்ளன என்றும் அறிந்து குறிப்பெடுப்பார்கள். பின் பறவையைப் பாடம் செய்வார்கள். இதற்கான உழைப்பு அதீதமானது. அதை ஒரு மனிதர் எழுபது வருடங்களுக்கு மேலே செய்தார் என்பதில் இருந்தே சலீம் அலியின் உழைப்பின் உயரத்தை நீங்கள் அறிந்து கொள்ளலாம். பறவைகள் காதல் மீதான தான் திருமணம் ஆன பின்னும் பர்மாவின் காடுகளின் ஊடாகப் பறவைகளைத் தேடிப்போகிற அளவுக்குப் பறந்து விரிந்தது. ஒட்டகங்களோடு பாலைவனங்களில் பயணம், லடாக் ஊடாக இதயம் சிலிர்க்கும் பயணம் என ஓடிக்கொண்டே இருந்த நாயகன் அவர்.
முன்னூறு வகைப் பறவைகளைக் கண்டுபிடித்த இவர் , பறவைகளுக்கு என்றொரு மொழி, உணர்வு, வலி உண்டு எனத்தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தார் அவருக்கே காடே ஆய்வகம். அவரின் பென்சில் ஸ்கெட்ச்களை தேடிப்பாருங்கள். அசந்து போவீர்கள். பிராணி நலன், விலங்குரிமை, காட்டுயிர் பாதுகாப்பு ஆகியவற்றைப் போட்டுக் குழப்பிக் கொள்கிறோம் நாம் என்று உறுதியாகப் பேசினார் அவர்.
அவரின் சுயசரிதையை எண்பத்தி ஏழு வயதில் எழுதினார். நூலின் ஆரம்பத்தில் மட்டுமே அவரைப்பற்றிப் பேசுவார். பின்னர் எல்லா இடத்திலும் பறவைகள், தன்னை ஆக்கிய மனிதர்கள் என்று மட்டுமே நூலை நகர்த்தி இருப்பார். "இன்றைக்கு வாழும் வாழ்க்கை மட்டுமே நிஜம் ; பனிமூட்டம் போன்ற கேள்விகளில் மனதை குழப்பிக்கொள்ளாமல் வாழ்வை நல்ல செயல்களில் ஈடுபட்ட நிலை நிறுத்த வேண்டும். ” என்ற அவர் அப்படியே வாழ்ந்தார். அவரின் சுயசரிதை சிட்டுக்குருவியின் வீழ்ச்சி . ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சியில் தான் அந்த நாயகனின் எழுச்சித்தேடல் தொடங்கியது சுவையான முரண் தான் !
Post a Comment