வாட்சன் மற்றும் க்ரிக் | தினம் ஒரு அறிவியல் மேதை

 


வாட்சன் மற்றும் க்ரிக்

அறிவியலில் சில நிகழ்வுகள் கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கும். ஆனால் அவை ஒரு மிகப்பெரிய தேடலுக்கான, புரிதலுக்கான வாசலை திறந்து விடக்கூடும். அப்படி ஒரு அற்புதத்தை நிகழ்த்தியது தான் வாட்சன் மற்றும் க்ரிக் அறிவித்த டி என் ஏவின் இரட்டைச்சுருள் மாதிரி. எப்படி உயிர்களின் பந்தம் நிலைத்திருக்கிறது; உயிர்கள் உடலுறவு கொண்டு தங்களின் சந்ததியை உருவாக்குகின்றன என எல்லாருக்கும் தெரியும்.

இது எப்படிச் சாத்தியம்? ஆணின் விந்துவும்,பெண்ணின் கரு முட்டையும் சேர்வது ஓகே. அவைகளுக்குள் இணைப்பையும் அடுத்தச் சந்ததிக்கு எப்படிப் பல்வேறு சங்கதிகள் கடத்தப்படுகின்றன என்பது புரியாத புதிராக இருந்தது.

ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த பிரெட்ரிக் மெய்ஷர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தெரியாமலே ஒரு அற்புத பொருளை பிரித்து எடுத்திருந்தார், அது செல்லின் உட்கருவில் இருந்து எடுக்கப்பட்ட நியூக்ளீன் என அவர் அழைத்த அமிலம். அது தான் பிற்காலத்தில் நியூக்ளிக் அமிலம் என அறியப்பட இருக்கும் அற்புதம்.

மெண்டல் எனும் செக் பாதிரியார் பட்டாணிகளின் வெவ்வேறு அம்சங்களை எடுத்துக்கொண்டு அடுத்தத் தலைமுறைக்கு அவை கடத்தப்படுவது ஒரு தெளிவான முறையில் நிகழ்வதைக் கண்டறிந்தார், அந்தக் கடத்தியை பிற்காலத்தில் ஜீன் என்றார்கள். ஜீன் மற்றும் நியூக்ளிக் அமிலம் இரண்டுக்கும் தொடர்பு இருப்பதாகப் பெரும்பாலான பேருக்கு தோன்றவில்லை.

ஆஸ்வால்ட் எனும் விஞ்ஞானி நோய் உண்டாக்கும் பாக்டீரியாவின் நியூக்ளிக் அமிலத்தைத் தீங்கு செய்யாத பாக்டீரியாவுக்குச் செலுத்திய பொழுது அதுவும் நோய் உண்டாக்கும் தன்மையை பெற்றிருப்பதைக் கண்டார்.

ஒரு வழியாக உயிர்களின் தோற்றத்துக்கு டி என் ஏ காரணம் எனக் கண்டுபிடித்து விட்டார்கள். அடுத்தச் சிக்கல் எப்படி அடுத்தத் தலைமுறை உருவாகிறது; எப்படி ஜீன்கள் கடத்தப்படுகின்றன என்பதற்கான விடை டி என்ஏவின் உருவத்தை கண்டறிவதில் இருந்தது அதற்கான முயற்சியில் பலபேர் இறங்கி இருந்தார்கள்.

லினஸ் பாலிங் எனும் வேதியியலுக்கு நோபல் பரிசை மூலகூறுகளுக்கு இடையே இருக்கும் பிணைப்புகள் பற்றிய தன்னுடைய பணிகளுக்காகப் பெற்றிருந்த மனிதர் இறங்கினார். டி.என்.ஏ.வின் உருவம் மூன்று சுருள்கள் வடிவில் இருக்கும் என அவர் எண்ணினார். அவர் டி.என்.ஏ. எளிமையான வடிவம் கொண்டதாக
இருக்கும் என எண்ணவில்லை. கூடவே இன்னொரு அம்சமும் தெரிந்திருந்தது.

டி என் ஏவில் அடினின் தைமின் குவானின் சைடோசின் எனும் நான்கு அடிப்படை கூறுகள் இருந்தன என்பது அது. சார்காஃப் எனும் நபர் ஒரு முக்கியமான ஆச்சரியத்தைக் கண்டார். அடினின் தைமின் சம அளவிலும், குவானின், சைடோசின் சம அளவிலும் இருப்பதே அது.

இன்னொரு புறம் எக்ஸ் ரே கதிர்களைப் பயன்படுத்தி ரோசாலின்ட் பிராங்க்ளின், வில்கின்ஸ் எனும் இரு விஞ்ஞானிகள் டி என் ஏ வின் உருவத்தைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.

ரோசாலின்ட் அவர்களின் ஒரு உரையை அரைகுறையாகக் கேட்ட வாட்சன் க்ரிக் எனும் தன் நண்பருடன் இணைந்து மூன்று சுருள் உருவம் டி என் ஏ வுக்கு உண்டு என நம்பினார் பின்னர் டி என் ஏவின் படத்தை ஒரு வழியாக எக்ஸ் ரே மூலம் உருவாக்கி ரோசாலின்ட் மற்றும் வில்கின்ஸ் சாதித்த பொழுது வாட்சன் க்ரிக் இருவருக்கும் அது இரட்டை சுருள் உருவம் எனத் தெரிந்தது.

சார்காஃப் சொன்ன சம அளவு விஷயத்தை வைத்துக்கொண்டு இணைதல் நடக்கிறது என அறிவித்தார்கள். அதாவது அடினின் தைமின் உடன் எப்பொழுதும் இணையும்; இப்படி நடக்கிற பொழுது ஜீன்களின் அடுத்தச் சந்ததிக்கு ஒரு தலைமுறையில் இருந்து வாழ்வதற்கான அனைத்து செய்திகளும் கடத்தப்படுகின்றன எனவும் விளக்கினார்கள்.

வில்கின்ஸ், வாட்சன், க்ரிக் ஆகிய மூவருக்கும் ஒரு ஒன்பது வருடம் கழித்து நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. ரோசாலின்ட் மரணமடைந்து இருந்ததால் அவருக்குப் பரிசு தரப்படவில்லை. ஏற்கனவே இருந்த விஷயங்களை அழகாக கோர்த்து நோபல் பரிசை அள்ளிக்கொண்டார்கள் வாட்சன் மற்றும் க்ரிக்.

இந்தக் கண்டுபிடிப்புதான் ஜெனடிக் இன்ஜினியரிங் கதவுகளை திறந்தது. எல்லா உயிரினங்களின் பரிணாமம், வளர்ச்சி ஆகியன பற்றிப் பெரிய புரிதல்கள் சாத்தியமானது. புதிய மருந்துகள் கண்டறிதல், ஜீன்களின் பங்களிப்பை மேலும் துல்லியமாக அறிதல் என அறிவியலின் உலகம் விசாலம் அடைந்தது. மாலிகுலார் பையலாஜி துறையும் பிறந்தது. எண்ணற்ற ஆய்வுகள், மனித குலத்தின் வரலாற்றை உணர்வதற்கான பெருங்கதவை திறந்து விட்ட இந்த இரட்டை சுருள் மாதிரியை ‘Molecular Structure of Nucleic Acids: A Structure for Deoxyribose Nucleic Acid எனும் கட்டுரையில் வாட்சன் மற்றும் க்ரிக் குறிப்பிட்டார்கள்.

Post a Comment

Previous Post Next Post

Follow Outlines of Botany