பி. மஹேஸ்வரி
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 1904-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9-ஆம் தேதி மஹேஸ்வரி பிறந்தார்.
இவரது தந்தை மகனை ஒரு சாதனையாளராக வளர்க்க வேண்டும் என்பதற்காக, கல்வி சம்பந்தமாக மகன் கேட்ட எதையும் வாங்கித்தர தாமதித்ததே இல்லை. பி.எஸ்.ஸி. படிக்கும்போது, இவரது ஆசிரியராக இருந்தவர் 'வின்ஃபீல்டு டட்ஜியன்' என்பவர்.
இவர் நமது இந்திய பொட்டானிக்கல் சொஸைட்டியின் நிறுவனராக இருந்தார். இவருக்கு தன்னிடம் படித்த மாணவர்களில் மஹேஸ்வரியின் மீது மிகுந்த பாசம் இருந்தது.
எனவே, ஆராய்ச்சிக்காகத் தான் செல்லும் இடங்களுக் கெல்லாம் மஹேஸ்வரியை அழைத்துச் செல்வார். எம்.எஸ்.ஸி. பட்டம் பெற்ற பிறகு, ஆசிரியரின் தலைமையில், பூக்கும் தாவரங்களின் வாழ்க்கை அமைப்பு முறைகளில் தீவிர கவனம் செலுத்தினார். 'தாவரவியல் துறையின் தந்தை' என்று போற்றப்படும் அளவிற்கு பெருமை பெற்றார். வண்டு, பட்டாம்பூச்சிகள், தேனீக்களின் துணை கொண்டுதான் ஒரு பூவில் உள்ள மகரந்தத்தூள் இன்னொரு செடியை அடைகிறது. அங்கு கருவுறுதல் நடைபெறுகிறது. பூ காயாகி, விதையாகி மண்ணில் விழுந்து நீர், உரம் போன்றவற்றின் துணையால் மீண்டும் செடியாகிறது. இதுபற்றித் தீவிரமாக ஆராய்ந்தார்.
தாம் கண்டறிந்த உண்மைகளை உலகுக்கு வெளிப்படுத்தினார். தாவரங்களின் கருவுறுதல் பற்றிய வளர்ச்சிக்காக 'பீர்பால் சாஹ்னி விருது’, 'சுந்தர்லால் ஹோரா மெமோரியல் விருது' போன்றவற்றைப் பெற்றார். 1965-ஆம் ஆண்டு ராயல் சொஸைட்டியின் ஃபெல்லோவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தாவரவியல் பற்றி பல அரிய நூல்களை எழுதினார். அது அவருக்குப் பெரும் புகழைத் தேடித்தந்தது. இந்தத் துறையை விரிவுபடுத்த விரும்பி ‘இன்டர் நேஷனல் சொஸைட்டி ஆஃப் ப்ளான்ட் மார்ஃபாலஜிஸ்ட்' என்னும் ஆய்வுக்கூடத்தை நிறுவினார்.
டில்லியின் தாவரவியல் துறையின் தலைவராக இவரை நியமித்தனர். 'பிளான்ட் எம்பிரியாலஜி' என்ற பிரிவில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள தன்னுடைய மாணவர்களை ஊக்கப்படுத்தினார். இதன்பிறகே இத்துறை பற்றிய ஆராய்ச்சி நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டது. எனவே, இவர் 'பிளான்ட் எம்பிரியாலஜி பிரிவின் தந்தை' என்று போற்றப்படுகிறார். அதுமட்டுமல்ல, 'ஆஞ்ஜியோஸ்பெர்ம்ஸின் டெஸ்ட் ட்யூப்' முறையில் கருவுறுதலை முதன்முதலாகக் கண்டுபிடித்தவர் இவரே. இது தாவரவியல் துறையில் ஒரு மைல்கல்லாகவே கருதப் படுகிறது. இவர் 1966-ஆம் ஆண்டு இறந்தார். ஆனாலும், இவர் தாவரவியல் துறைக்கு ஆற்றிய தொண்டுகள் காலத் தால் அழியாதது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
Super
ReplyDeletePost a Comment