பி.பி. பால் | தினம் ஒரு அறிவியல் மேதை


 பி.பி. பால்

நம் இந்திய நாடு கோதுமை உற்பத்தியில் அதிக வளர்ச்சியடையாத காலகட்டமாக இருந்த நேரம். காரணம் விவசாய விஞ்ஞான ஆராய்ச்சிகள் அப்போதெல்லாம் முன்னேற்றம் அடைந்திருக்கவில்லை. எனவே, நம்முடைய நாட்டில் உற்பத்தியாகும் கோதுமைப் பயிர்கள் எல்லாம் நோயினால் தாக்கப்பட்டு பெருமளவில் பாதிக்கப் பட்டிருந்தன.

எனவே நல்ல மகசூல் தரக்கூடிய, அதேசமயம் நோயி னால் தாக்கப்படாத கோதுமை ரகங்களைக் கண்டுபிடிக்கத் தீர்மானித்தார் இளம் விஞ்ஞானி ஒருவர். இவர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள முகுந்த்பூரில் 1906-ஆம் ஆண்டு மே மாதம் 26-ஆம் நாள் பிறந்தார். இவரது பெயர் பெஞ்சமின் பியரி பால்.

சிறுவயதிலேயே செடி கொடிகள் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார். இவரது குழந்தைப் பருவமும், கல்லூரிப் படிப்பும் பர்மாவில் கழிந்தது. அப்போது அவர்களது இனிய இல்லத்தில் அழகிய தோட்டம் ஒன்று அமைத்துப் பராமரித்து வந்தார். இவரது தந்தைக்கு செடி, கொடிகள் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. அதே பழக்கம் மகனுக்கும் வந்து விட்டது.

மகன் பால் சிறு வயதிலிருந்தே தங்கள் தோட்டத்தைக் கண்ணும் கருத்துமாகப் பராமரித்து வந்தார். அவற்றை மேலும், மேலும் வளப்படுத்தி வந்தார். இந்த ஆர்வத்தினால் கோதுமை விவசாயம் பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்கிற ஆசையில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந் தார். அதில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார்.

எப்படியாவது நம்முடைய இந்திய நாட்டை கோதுமை வளர்ச்சியில் முன்னேற்றம் அடையச் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது பாலுக்கு. எனவே, 1933-ஆம் வருடம் டில்லியில் உள்ள 'இந்தியன் அக்ரிகல்ச்சுரல் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்'டில் ஆராய்ச்சியாளராகச் சேர்ந்தார்.

இவரது அயராத உழைப்பின் காரணமாக அதிக நோய் எதிர்ப்பு சக்தி பெற்ற என்.பி. 700, என்.பி. 800 என்ற புதிய ரக கோதுமைகளைக் கண்டுபிடித்தார்.

அத்துடன் விட்டுவிடாமல் தொடர்ந்து கோதுமை உற்பத்தியில் ஆராய்ச்சி செய்து பதினெட்டு ஆண்டு காலம் இடைவிடாமல் உழைத்ததன் பயனாக 1954-ஆம் ஆண்டு என்.பி. 809 என்ற கோதுமையைக் கண்டுபிடித்தார். இது நிறைய மகசூலைத் தந்தது. அத்துடன் எல்லாவித நோய் களையும் எதிர்த்து நிற்கும் ஆற்றல் பெற்றிருந்தது. அதன் பிறகுதான், இந்தியா கோதுமை உற்பத்தியில் சிறப்பான ஓர் இடத்தைப் பெற்றது எனலாம்.

விவசாயத்துறைக்கு இவர் ஆற்றிய பணியைப் பாராட்டி 'தி ரஃபி அஹமத் கித்வாய்' பரிசு, 'தி பீர்பால் ஸாஹ்னி  மெடல்', 'ஓ.எஸ். ராமானுஜம் மெடல்' போன்ற பல்வேறு விருதுகளை இவருக்கு அளித்தனர். அத்துடன் பாலுக்கு ரோஜா செடியின் மீது மிகுந்த அன்பு உண்டு. எனவே, ரோஜா செடிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்தார். இவர் ஓர் அழகிய ரோஜா தோட்டம் வைத்திருந்தார். அதில் நாற்பதுக்கும் மேற்பட்ட ரோஜா வகைகள் இருந்தன.

ரோஜா செடியை வளர்ப்பது பற்றிய அறிவு மக்களுக்கு இல்லாமல் இருந்தது. அதை அனைவரும் அறிந்து கொள்ளும் படியாக ரோஜா செடி வளர்ப்புகள் குறித்து பல நூல்களை எழுதினார். அதில் ‘தி ரோஸ் இன் இண்டியா' என்ற நூல் இவருக்கு அதிகப் புகழைத் தேடித்தந்தது.

அதன்பிறகு 1965-ஆம் ஆண்டு டில்லியில் புதிதாக நிறுவப்பட்ட 'இந்தியன் கவுன்சில் ஆஃப் அக்ரிகல்ச்சுரல் ரிசர்ச்' என்ற ஆராய்ச்சி நிறுவனத்தின் டைரக்டர் ஜெனர லாகப் பதவி ஏற்றார். இந்திய விவசாயத்துறையின் வளர்ச்சிக்குப் பெருமளவில் உதவி செய்வது இந்த விஞ்ஞான ஆராய்ச்சி நிறுவனம்தான்.

விஞ்ஞானி பால் 1972-ஆம் ஆண்டு ராயல் சொசைட்டியின் ஃபெல்லோவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தியாவில் பசுமைப்புரட்சி ஏற்படக் காரணமாக இருந்தவர் விஞ்ஞானி பால்தான். இவரது ஆராய்ச்சியும், செயல் திட்டங்களும்தான் இந்தியா விவசாயத்துறையில் இந்த அளவு முன்னேற்றம் அடைய மிகப்பெரிய துணையாக இருந்தது.

இந்தியாவின் பசுமைப் புரட்சிக்காக இந்த விஞ்ஞானி ஆற்றிய பணிகள் மிகவும் போற்றத்தக்கதாகும். 

Post a Comment

Previous Post Next Post

Follow Outlines of Botany