அலெக்சாண்டர் பிளெமிங்
எண்ணற்ற மக்களின் உயிர் காக்கும் பெனிசிலினைக் கண்டுபிடித்தவர் அலெக்சாண்டர் பிளெமிங். ஸ்காட்லாந்தில் பிறந்த இவர் இளம் வயதில் தன் தந்தையை இழந்தார். அதன் பின்னர் வறுமையான சூழலிலேயே படித்து வந்தார். போலோ மற்றும் நீச்சலில் அளவில்லாத ஆர்வம் கொண்டவர் இவர். ஒருநாள் நீர்நிலையில் ஒரு சிறுவன் தத்தளிப்பதை பார்த்து உதவினார் இவர், அந்தச் சிறுவன் பிரபு வீட்டு பிள்ளை. அவரின் அப்பா பிளெமிங்கின் கல்விச்செலவை ஏற்றுக்கொண்டார். அந்தத் தத்தளித்த சிறுவன் வருங்காலத்தில் பிரிட்டனின் பிரதமர் ஆன சர்ச்சில் !
பாலிடெக்னிக் படித்துவிட்டு புனித மேரி மருத்துவப்பள்ளியில் மருத்துவப் படிப்பை மேற்கொண்ட பின்னர் ஆல்மோத் ரைட் எனும் நுண்ணுயிரி ஆய்வாளரிடம் வேலைக்குச் சேர்ந்தார். அங்கே டைபாய்ட் நோய்க்கு தடுப்பூசி போடும் முறையைக் கண்டறிந்தார். பின் தன் துறை சார்ந்தே பேராசிரியர் ஆனார். லைசோசோம் நோய்களைத் தடுப்பதையும்,நோய் எதிர்ப்புக்கும் வெள்ளை அணுக்களுக்கு அதில் உள்ள பங்கு பற்றியும் விவரித்தார்.
ஸ்டைபாலோ காகஸ் பாக்டீரியா இருந்த ஒரு தட்டை மூடாமல் அப்படியே திறந்துவிட்டு நகர்ந்துவிட்டார் இவரின் உதவியாளர். அடுத்த நாள் காலையில் அப்படியே திறந்து கிடப்பதை கண்டு உதவியாளரை கடிந்து கொண்டார். அவர் அதைக் கொட்ட எடுத்துக்கொண்டு போன பொழுது அவசரப்படாமல் அந்தத் தட்டை வாங்கி நுண்ணோக்கியில் வைத்து பார்த்தார். நீல நிறத்தில் எதோ ஒன்று பாக்டீரியவை தின்று தீர்த்து இருந்தது. அந்த நீல நிற பூஞ்சை தான் பெனிசிலின் எனும் அற்புதம். உலகின் முதல் ஆன்டிபயாடிக் கண்டறியப்பட்டது. நிமோனியா, தொண்டை அடைப்பான் முதலிய நோய்களுக்குத் தீர்வு தருகிற அற்புதத்தைப் பென்சிலின் செய்கிறது.
உலகைக்காக்கும் பெனிசிலினை கண்டுபிடித்தவர் என்று அலெக்சாண்டர் ப்ளேமிங் கொண்டாடப்படுகிறார். அவருக்கு இணையாகப் போற்றப்பட வேண்டியவர் ஹோவர்ட் ஃப்ளோரே இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய இணைக்குப்பிள்ளையாகப் பிறந்தவர். அப்பா ஷூ வியாபாரி மருத்துவப்பட்டம் பெற்ற பின்பு முனைவர் பட்டம் பெற்று நோயியல் துறைப் பேராசிரியராக உயர்ந்தார். லைசோசோம் பாக்டீரியாக்களைக் கொல்கிற ஆற்றல் வாய்ந்தது. அதில் எச்சில் மற்றும் கண்களில் காணப்பட்டது. அதைக்குறித்தே முதலில் ஆய்வுகள் செய்தார்.
பெனிசிலியம் பாக்டீரியக் கிருமிகளைக் கொள்வதாகப் பிளெமிங் கண்டறிந்து இருந்தார். அதை அவரால் பிரித்தெடுக்க முடியவில்லை. அந்த ஆய்வில் இறங்கலாம் என்று இவரும்,செயின் என்கிற சக ஆய்வாளரும் அதைப்பற்றிய குறிப்பை ஒரு மருத்துவ இதழில் படித்ததும் முடிவு செய்தார்கள். ராக்பெல்லர் அமைப்பு நிதியுதவி அளித்தது. பல்வேறு ஆய்வாளர்களை ஒருங்கிணைத்து ஆய்வுகளை முடுக்கினார் செயின் பெனிசிலினை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். நார்மன் ஹீட்லே பெனிசிலின் உற்பத்தியை பெருக்குவதைக் கவனித்துக்கொண்டார். மனிதர்கள் மீது இதைச் செலுத்துவதன் பொழுது ஏற்படும் தாக்கங்களை ஃப்ளோரே ஆய்வு செய்தார். பெனிசிலின் பிரித்தெடுக்கப்பட்டது. அதை எட்டு எலிகள் மீது இவரின் குழு சோதிக்க முடிவு செய்தது. ஸ்ட்ரேப்டோகாக்கி எனப்படும் கொடிய பாக்டீரியா செலுத்தப்பட்டது. நான்கு எலிகளுக்குப் பெனிசிலின் தரப்பட்டது. அவை நான்கு மட்டும் பிழைத்துக்கொண்டன.
கூரான பொருளில் நோய்க்கிருமி இருந்தாலோ, அல்லது காற்றில் இருந்து கிருமி காயத்தின் மீது தாக்குதல் புரிந்தாலோ வெட்டியெடுக்கிற அளவுக்கு அவை வேகமாக வளர்ந்தன.
ஆல்பர்ட் அலெக்சாண்டர் எனும் நபரை ரோஜா முள் குத்தியது. அவரின் முகம்,கண்கள் எல்லாமும் வீங்கியிருந்தன. நோய்த்தொற்றால் ஒரு கண் நீக்கப்பட்டது. இன்னொரு கண்ணையும் மூடியிருந்தார்கள். அவருக்குப் பெனிசிலின் என்கிற அற்புதத்தைத் தர முடிவு செய்தார் ஃப்ளோரே. ஓரளவுக்கு அவர் தேறிக்கொண்டு இருக்கும் பொழுதே மருந்து போதாமல் அவர் இறந்து போனார். அவரின் சிறுநீரில் இருந்து மருந்தை மீட்கும் முயற்சிகள் தோற்றது குழந்தைகளிடம் மட்டும் ஆய்வு செய்வது என்று முடிவு செய்தார். அப்படிச் செய்து படிப்படியாகப் பெனிசிலின் உற்பத்தியை பெருக்கும் முறையை அடைந்தார்கள்.
போர்க்காலத்தில் ஆய்வுகள் செய்தமையால் போதிய கருவிகள் கிடைக்கவில்லை. உதவிகளும் இல்லை. பால் கறக்கப் பயன்படும் பழைய கருவிகளைக் கொண்டும், மருத்துவமனையின் படுக்கைகளும் பெனிசிலின் உருவாக்க பயன்பட்டன. புத்தக ஷெல்பில் இருக்கும் இழைகளைக்கொண்டு பெனிசிலின் திரவத்தை வடிகட்டினார்கள்.
பெனிசிலின் உற்பத்தியை பெரிய அளவில் செய்யப் பேடன்ட் செய்வதில் கவனம் செலுத்தாமல் அமெரிக்காவுக்குக் கள்ள விமானத்தில் ஏறிப்போனார்கள். அங்கே விவசாய ஆய்வகம் ஒன்றில் பெனிசிலினை வளர்க்கும் திரவத்தைக்கண்டார்கள். பெரிய அளவில் பெனிசிலின் உற்பத்தி சாத்தியமானது. வடக்கு ஆப்ரிக்காவில் உலகப்போர் சமயத்தில் சென்று சேர்ந்தார். அங்கே இருந்த வீரர்களுக்குக் காயம் ஏற்பட்டால் அப்பகுதியை வெட்டி காயத்தை ஆறவிடுகிற பழக்கம் இருந்தது. இவர் காயங்களைத் தைக்கச்சொன்னார். பெனிசிலினை செலுத்தினார். காயங்கள் வேகமாக ஆறின. மாயம் நிகழ்ந்தது. பிளெமிங் கண்டுபிடித்த அற்புதம் ப்ளோரே குழுவின் முயற்சியால் பல லட்சம் வீரர்களைக் காப்பாற்றியது.
அவருக்குப் பல்வேறு கவுரவங்களை அவர் நாட்டு அரசு செய்தது. ஆஸ்திரேலிய கரன்சியில் அவர் முகத்தை வெளியிட்டது. அவரோ நேர்முகங்கள் தராமல் அமைதியாகவே இருந்தார். "பல்வேறு நபர்களின் சாதனை இது ! அதிர்ஷ்டம் எங்கள் பக்கம் இருந்ததும் காரணம்." என்று தன்னடக்கமாகச் சொன்னார் ப்ளோரே. பெனிசிலின் மக்களின் உயிர்களைக் காப்பாற்றி மக்கள்தொகை பெருக்கத்துக்கு வழி வகுத்ததைக் கண்ட அவர் அதைக் கட்டுப்படுத்தும் மருந்துகளைக் கண்டுபிடிக்கும் ஆய்வுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
Post a Comment