ஜெகதீஷ் சந்திர போஸ் | தினம் ஒரு அறிவியல் மேதை


ஜெகதீஷ் சந்திர போஸ்

சந்திர போஸ் அவர்களின் வாழ்க்கை இணையில்லாத உழைப்பு. அளவில்லாத தன்னம்பிக்கை, கூடவே மார்க்கோனியின் துரோகம் ஆகியவற்றால் இணைந்து உருவானது. அந்த வலி தரும் கதையைத் தெரிந்து கொள்வோம்

ஜகதீஷ் சந்திர போஸின் அப்பா ஆங்கிலேய அரசில் உயர் பதவியில் இருந்தவர், ஆனாலும், வித்தியாசமான நபர். ஏழைகளுக்குத் தொடர்ந்து உதவுகிற காரியங்களை செய்து கொண்டிருந்தார்; மக்களுக்கு உதவத் தன் சொத்துக்களைப் பெருமளவில் செலவிட்டார். எளியவர்கள் உயரவேண்டும் என்பது மட்டுமே அவர் மனதில் இருந்தது. ஆங்கிலப் பள்ளிக்கூடங்களில் தன் மகனை படிக்க அனுப்பாமல் தாய்மொழியான வங்கமொழியில்

எளியவர்களின் பிள்ளைகளோடு போஸை படிக்க வைத்தார். இயற்பியலில் போஸ் பட்டம் பெற்றதும் அவரின் பிள்ளையை இங்கிலாந்துக்குப் படிக்க அனுப்ப முடிவு செய்தார்.

கண்டிப்பாகச் சிவில் சர்வீஸ் வேலைக்குத் தன் மகன் போகக்கூடாது என்று சொல்லிவிட்டார். காரணம் அது எளியவர்களிடம் இருந்து அவனைப் பிரித்துவிடும் என்கிற உறுதியான நம்பிக்கை அவரிடம் இருந்தது. மக்களுக்குச் சேவை செய்யப் பயன்படும் மருத்துவம் படிக்கக் கொடுமையான வறுமைக்கு நடுவிலும் மனைவியின் நகைகளை அடமானம் வைத்து அனுப்பினார். அங்கே போய்ப் பிணவறைகளின் நாற்றம் பொறுக்காமல் இயற்கை அறிவியல் மற்றும் அறிவியலில் பட்டம் பெற்றுப் போஸ் திரும்பினார்.

ரிப்பன் இந்தியாவின் வைஸ்ராயாக இருந்தார், இந்தியர்களை மனிதர்களாக நடத்தியவர் அவர். மாநில கல்லூரியில் போஸ் பேராசிரியர் ஆகியிருந்தார். அவருக்கு முழுச்சம்பளத்தை இந்தியர் என்பதால் தர மறுத்தார்கள். மூன்று வருடம் சம்பளமே வாங்கிக் கொள்ளாமல் சிறப்பாக நடத்தினார் இவர். அசந்து போய் மூன்று வருட பாக்கியோடு ஆங்கிலேயர்களுக்கு இணையான சம்பளம் தந்தார்கள். இந்திய கல்வித்துறை பணிக்கு நியமனம் செய்வதாக உறுதியளித்தார் ரிப்பன் கடும் போராட்டத்துக்குப் பின் அவரை அப்பதவிக்குக் கொண்டு வத்தார் ரிப்பன்,

முப்பத்தைந்து வயது வரை பாடங்கள் மட்டுமே நடத்திக்கொண்டு இருந்த போஸுக்கு ஆய்வு செய்ய வேண்டும் என்று தோன்றியது. மாக்ஸ்வெல் மின்காந்த அலைகள் பற்றிக் குறித்திருந்தார்; அவற்றை உருவாக்கி காட்டியிருந்தார்.

ஹெர்ட்ஸ். இருபத்தி நான்கு அடி மட்டுமே அளவு கொண்ட சிறிய அறையில் எந்த அறிவியல் உபகரணங்களோ, வழிகாட்டியோ இல்லாமல் இதுசார்ந்தாய்வில் தானே இறங்கினார் போஸ். லாட்ஜின் ஹெர்ட்ஸ் மற்றும் அவருக்குப் பின்வந்தவர்கள் என்கிற புத்தகம் தந்த உந்துதலில் இயங்கினார். கொஹார் என்கிற கருவியை ஏற்கனவே பான்லி என்கிற அறிஞர் உருவாக்கி இருந்தார். அதன் மூலம் ரேடியோ அலைகளை கண்டறிய முடியும் என்று அதைச் செம்மைப்படுத்திய லாட்ஜ் சொன்னார். ஆனால், அந்தக்கருவி நிறையக் குறைபாடுகளோடு இருந்தது. அதனால் சீராக எந்த ரேடியோ அலைகளையும் உணரமுடியவில்லை. போஸ் நிறைய மாற்றங்களை அந்தக் கருவியில் கொண்டுவந்தார்.

இன்னமும் குறித்துச் சொல்வதென்றால் அதை முழுமையாக மாற்றியமைத்தார். பாதரசத்தை அதில் சேர்த்தார்: சுருள் வடிவ ஸ்ப்ரிங்குகளை இணைத்தார். கூடவே டெலிபோனை பயன்படுத்தினார். கூடவே குறைகடத்தி படிகத்தைக் கருவியில் இணைத்து பார்த்தார். வெறுமனே அலைகள் இருக்கிறது என்று கண்டறிந்து கொண்டிருந்த கருவியானது அலைகளை உற்பத்தி செய்து, மீண்டும் அதைத் திரும்பப்பெறுகிற மாயத்தைச் செய்தது. அந்த அற்புதம் அப்பொழுது தான் நிகழ்ந்தது. 5 மில்லிமீட்டர் அளவின் அலைகள் உண்டானது. இவையே இன்றைக்கு மைக்ரோவேவ் என்று அறியப்படுகின்றன. மின்காந்த அலைகளின் எல்லாப் பண்பும் அவற்றிடம் இருப்பதை நிரூபித்தார் போஸ்ட் கம்பியில்லா தகவல் தொடர்பை சாதித்த முதல் ஆளுமை ஆனார். அதைக்கொண்டு ஒரு பெல்லை ஒலிக்க வைத்து வெடிமருந்தை வெடிக்க வைத்தும் காண்பித்தார் போஸ். கூடவே அதைக்கொண்டு சில மைல் தூரத்துக்கு ரேடியோ கொண்டு சென்று மீண்டும் பெறவும் செய்து சாதித்துக் காண்பித்தார் போஸ். அதாவது உலகின் முதல் ரேடியோ எழுந்தது. இது நடந்து இரண்டு வருடங்கள் கழித்து மார்க்கோனி ரேடியோ பற்றிய ஆய்வுகளில் ஈடுபடுவதாகச் சொன்னார்.

ஜகதீஷ் சந்திர போஸ் பயன்படுத்திய கொஹரரை மார்க்கோனிக்கு இத்தாலிய கடற்படையில் இருந்த அவரின் நண்பர் சோலாரி அறிமுகப்படுத்தினார். அப்படியே அதை எடுத்து தன்னுடைய கருவியில் பொருத்தினார் மார்க்கோனி. ஒரே ஒரு மாற்றம் U வடிவத்தில் போஸ் அமைத்திருந்த பாதரச டியூபை நேராக மாற்றினார். S என்கிற மோர்ஸ் குறியீட்டை தான் அனுப்பியதாக வேறு அறிவித்தார். அதை பதிவு செய்த ஆவணங்கள் இல்லை என்பது தனிக்கதை. போஸ் செய்த ஒரு தவறு தான் கண்டுபிடித்த கொஹரர் கருவியைப் பேடன்ட் செய்ய மறுத்தார், "என் தந்தையைப்போல நானும் மக்களுக்குச் சேவை செய்ய எண்ணுகிறேன் வணிக நோக்கங்கள் எனக்கில்லை” என்றார். அந்தப் போஸ் கண்டுபிடித்த கருவியைத் தான் கண்டுபிடித்தேன் என்று வெட்கமே இல்லாமல் பதிவும் செய்துகொண்டார் மார்க்கோனி.

தன்னுடைய வாழ்க்கை வரலாற்றில் போஸ் செய்த உதவி அளவில்லாதது என்று ஒன்றரை பக்கம் எழுதிவைத்த மார்க்கோனிதான் திருடியதை பற்றி ஒரு வரி கூட மறந்தும் சொல்லவில்லை. இந்தப் பாதரச கொஹரர் என்று யாரேனும் கேள்வி கேட்டாலே பேய் முழி முழித்தார் அவர். ஒரு காலத்துக்குப் பிறகு அப்படியே ரேடியோவை தான் தான் கண்டுபிடித்தேன் என்று உலகம் ஏற்றுக்கொண்டு நோபல் பரிசு கொடுத்த பிறகு இரும்பு கொஹரர் என்று மாற்றிக்கொண்டு கச்சிதமாகச் சமாளித்தார்.

உண்மையில் அவருக்கு மின்காந்த அலைகளைப் பற்றித் தெரிந்தே இருக்கவில்லை என்று அவரே ஒரு நேர்முகத்தில் ஒப்புக்கொண்டார். அறிவியல் அறிவே இல்லாமல் இருபத்தி இரண்டு வயதில் போஸின் படைப்பை அப்படியே திருடி அவர் ரேடியோவை உருவாக்கியதாகச் சொன்னார் . போஸ் பெயரை மறந்தும் கூட வெளியே விடவில்லை.

ரேடியோவை போஸ் தான் கண்டுபிடித்தார் என்று வருங்காலத்தில் வந்த அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்தார்கள். மார்க்கோனி ஏமாற்றியது ஊர்ஜிதமானது. உலகின் முதல் ரேடியோவை உருவாக்கியவர் போஸ் என்று IEEE அதிகாரப்பூர்வமாக நூறு வருடங்கள் கழித்து அறிவித்தது. 'மார்க்கோனி தான் ரேடியோவை கண்டுபிடித்தார்' என்று இனிமேல் யாரவது சொன்னால் தலையில் கொட்டி அதைக் கண்டுபிடித்தது 'இந்தியர் போஸ்' என்று சொல்லுங்கள் !

Post a Comment

Previous Post Next Post

Follow Outlines of Botany