இலைகளை வெட்டும் எறும்புகள் (Leaf cutter ants) | இயற்கை சொல்லும் செய்தி
தென், மத்திய அமெரிக்காவின் சில பாகங்களான மெக்ஸிகோ, அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தெற்கு பகுதிகள் எங்கள் வாழ்விடங்கள்.
மனிதர்களாகிய உங்களுக்கு அடுத்தபடியாக உலகிலே சீரான சமுதாய அமைப்பும் உழைப்பும் உடையவர்களாக நாங்கள் கருதப்படுகிறோம்.
ஏறத்தாழ 6460 சதுர அடி பரப்பிலே நிலத்தடியில் அமைந்திருக்கும் எங்கள் கூடுகள் மிகவும் சிக்கலான அமைப்பு உடையவை. எங்கள் கூடுகளில் கூடி ஒரு ஏறத்தாழ 80 இலட்சம் வரைக்கும் எறும்புகள் கூடி ஒரு காலனியாக வாழுகிறோம்.
எங்கள் வாழ்க்கை சுழற்சிமுறை மிகவும் வினோதமானது. முதிர்ச்சி அடைந்த எறும்புகளுக்கு இறகுகள் முளைக்க ஆரம்பிக்கின்றன. உடனே ஆண், பெண் எறும்புகள் உற்சாகத்துடன் நிலத்தடி கூடுகளை விட்டுவிட்டு விண்ணிலே பறக்க ஆரம்பிக்கின்றன. ஒவ்வொரு பெண் எறும்பும் தனக்கு சொந்தமான ஒரு கூட்டையும் காலனியையும் அமைக்கும்படி தன் தாய் கூட்டைவிட்டு புறப்படும் போதே ஒரு சிறிய பூஞ்சை பூசணத்தை தன் தொண்டை குழிக்குள் சேமித்து வைத்துக்கொள்ளுகிறது.
பெண் எறும்புகள் ஒவ்வொன்றும் அநேக ஆண் எறும்புகளிடமிருந்து இலட்சக்கணக்கான விந்துக்களை ஒரே நாளில் தனது உடலில் சேர்த்து வைத்துவிடுகிறது. அந்த விந்துக்கள் அந்த பெண் எறும்பு ஆரம்பிக்க போகிற பண எறு புதிய காலனிக்கு ஆதாரமாக அமைகின்றன.
பெண் எறும்பு ஒரு நாளின் முடிவிலே நிலத்தை தொட்டவுடனே அவைகளின் இறக்கைகள் உதிர்ந்து விடுகின்றன, ஒவ்வொரு பெண் எறும்பும் பொருத்தமான ஒரு பொந்தை தெரிந்தெடுத்து ஒரு பூஞ்சை தோட்டத்தையும் விந்துக் களிலிருந்து தோன்றும் லார்வாக்களைக்கொண்டு ஒரு காலனியையும் உருவாக்க முயற்சிக்கிறது. இவ்வித முயற்சியில் 2.5% எறும்புகள் மட்டுமே வெற்றி பெறுகின்றன, மற்றவை செத்து மடிகின்றன.
தாவரங்களின் இலைகள், பூக்கள், புல்வகைகளை வெட்டி எங்கள் கூடுகளுக்குக் கொண்டுவந்து பூஞ்சைத் தோட்டங்களை உருவாக்குவது எங்களது வியத்தகு தனி பண்பாகும். எங்களது லார்வாக்களுக்கு இந்த பூஞ்சைகள் ஊட்டசத்து மிகுந்த உணவாக அமைகின்றன. இலைச்சாறுகளை உறிஞ்சி உண்டு முதிர்ந்த எறும்புகளாகிய நாங்கள் உயிர்வாழ்கிறோம்.
எங்கள் தொழிலுக்கேற்ப நாலுவகையான எறும்புகள் எங்கள் காலனியில் உள்ளன.
சிறிய தொழிலாள எறும்புகள் காளான் தோட்டங்களை வளர்த்து அவைகளை பராமரிக்கின்றன.
பூஞ்சைக் காளான் தோட்டத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள எறும்புகள் தோட்டத்தையும் அதை சுற்றியுள்ள நிலப்பரப்பையும் கண்காணித்து பாதுகாத்து தோட்டத்தை அழிக்கவரும் எதிரிகளை அழிக்கின்றன.
இலைகளை சேகரிக்கும் எறும்புகள் தேவையான இலைகளைத் தெரிந் தெடுத்து அவைகளை வெட்டித் துண்டுபண்ணி சுமந்து கூடுகளுக்குக் கொண்டுவந்து சேர்க்கின்றன.
பிரதான பெரிய தொழிலாளி எறும்புகள் எதிரிகள் கூடுகளை ஊடுருவாமல் அவைகளைக் காக்கும் போர்வீரர்களாக செயல்படுகின்றன.
ஒட்டுண்ணி பூஞ்சைகள் எங்கள் தோட்டத்திற்கு மிகுந்த சேதத்தை விளைவிக்கக் கூடியது. ஆகவே தோட்டக் கழிவுகள் உடனடியாக அகற்றப்பட வேண்டியது மிக அவசியம். விரைவில் இறந்துபோகும் நிலையில் உள்ள முதிர்ந்த எறும்புகள் கழிவுகுவியல் தொழிலாளிகளாக செயல்புரிகின்றன. ஆரோக்கியமான இளம் எறும்புகள் காலனியிலுள்ள மற்ற பணிகளை மேற் கொள்கின்றன. குப்பை ஏந்தி தொழிலாளர் தோட்டத்திலுள்ள கழிக்கப்பட்ட காளான் துண்டுகள், இலைகள் முதலியவற்றை காலனிக்கு வெளியே உள்ள குப்பைமேட்டில் கொண்டுவந்து சேர்க்கின்றன. அத்தோடு அவைகள் விரைவில் மட்கிபோகும்படியாக அடிக்கடி கிண்டி கிளறிவிடுகின்றன. இறந்துபோன எறும்புகளையும் இவ்வெறும்புகள் குப்பைமேட்டின் வெளிப்பரப்பில் கொண்டு வந்து அடுக்கி வைக்கின்றன.
Post a Comment